திருப்போரூர் ஒன்றியத்தில் ஏரிகளில் வெளியேறிய மழைநீரால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

திருப்போரூர்: நிவர் புயலால் கடந்த இரு நாட்களாக கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் கடும் மழை பெய்தது. இதனால், திருப்போரூர் ஒன்றியத்தின் ஏரிகளான கொண்டங்கி, தையூர், சிறுதாவூர், கரும்பாக்கம், காயார், இள்ளலூர், ஆலத்தூர், தண்டலம் ஆகிய ஏரிகள் நிரம்பின. குறிப்பாக கொண்டங்கி, சிறுதாவூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் ஓஎம்ஆர், இசிஆர் சாலைகளை இணைக்கும் நெம்மேலி சாலையின் இருபுறமும் கடல் போல் காட்சியளிக்கிறது. கிழக்கு கடற்கரை சாலைகோவளம் கிராமத்தில் 148 இருளர் பழங்குடி மக்கள், அங்குள்ள 2 தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதேபோன்று மானாம்பதி ஏரி நிரம்பி வழிந்ததால், அருங்குன்றம் பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால், பஞ்சந்தீர்த்தி கிராமத்தில் உள்ள 48 இருளர் குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து 48 குடும்பங்களை சேர்ந்த 184 பேர், சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மானாம்பதி ஏரியில் உபரிநீர் வெளியேறியதால், பெரியார் நகர், குயில் குப்பம் ஆகிய பகுதிகள் தண்ணீரில் மூழ்கின. அங்கிருந்த இருளர் பழங்குடியினர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். கொண்டங்கி, காயார், தண்டலம் ஏரிகளின் உபரிநீர் வெளியேற்றத்தாலும், கனமழையாலும் பக்கிங்காம் கால்வாயை மூழ்கடித்து வெள்ளம் சென்றது.

நிவர் புயலையொட்டி நேற்று முன்தினம் 2 மணிக்கு திருப்போரூர் ஒன்றியம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் பட்டு, நேற்று காலை 8 மணிக்கு திருப்போரூர் 4 மாடவீதிகளில் மட்டும் மின்சாரம் வந்தது. மற்ற பகுதிகளான குமரன், எம்ஜிஆர் நகர், இள்ளலூர் சாலை, சாரேஹோம்ஸ், இள்ளலூர் உள்பட பல பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கவில்லை. நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றால் ஓஎம்ஆர் சாலை, தையூர் விஜயசாந்தி குடியிருப்பு அருகே இருந்த பஸ் நிழற்குடை சரிந்து சாலையில் விழுந்தது.

Related Stories: