டெல்லி சலோ போராட்டத்துக்காக சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: அரியானா எல்லையில் போலீசார் நடவடிக்கை; பேச்சுவார்த்தைக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, `டெல்லி சலோ’ போராட்டத்துக்காக வந்த விவசாயிகள், அரியானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், `டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி நவம்பர் 26, 27 தேதிகளில், பேரணியாக சென்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

ஆனால், இதற்கு பாஜ ஆளும் அரியானா மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. மேலும், பஞ்சாப் உடனான அனைத்து எல்லைகளையும் மூடும்படியும் உத்தரவிட்டது. இருப்பினும், திட்டமிட்டப்படி நேற்று காலை முதல், ஏராளமான பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பேரணியாக புறப்பட்டனர். அவர்கள்  அரியானா மாநிலத்தின் ஷம்பூ பகுதியில் நுழைந்ததும், இம் மாநில போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீறி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் விரட்டினர். விவசாயிகளும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.

இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இதேபோல், டெல்லி எல்லையிலும் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் மோதல் நடந்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் போராட்டக்காரர்களின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்து வருகின்றனர். போராட்டக்காரர்களின் கூட்டத்தை கலைக்க அரியானா மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று நடக்கும் பேரணியில், 25,000 பெண்கள் உள்பட 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளதாகவும், 4,000க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பேரணியாக செல்ல இருப்பதாகவும் விவசாயிகள் சங்கத்தினர் கூறினர்.

விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் அரியானா அரசின் முயற்சிக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ``டெல்லி சலோ போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும். அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காண தயாராக இருக்கிறது. இதில், சுமுக முடிவு எட்டப்படும்,’’ என்று அழைப்பு விடுத்தார்.

* தூண்டுவதை நிறுத்துங்கள்

அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு வேளாண் சட்டங்களால் ஏதாவது பாதிப்பு உண்டானால் அரசியலை விட்டு விலகுவேன். ஆனால், அப்பாவி விவசாயிகளை தூண்டுவதை நிறுத்தி கொள்ளுங்கள்,’ என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை கேட்டுக் கொண்டுள்ளார்.

* உறுதியுடன் போராட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `நாட்டின் விவசாயிகள் தங்களுக்கு எதிராக மோடி அரசு இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து உறுதியுடன் போராடுகின்றனர்,’ என்று கூறி, விவசாயிகளின் போராட்ட வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

Related Stories: