கால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

புதுடெல்லி: கால்பந்து நட்சத்திரம் டீகோ மரடோனா மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அர்ஜென்டினா கால்பந்து அணி முன்னாள் கேப்டன் மரடோனா (60), மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்ட பாதிப்புக்காக அறுவைசிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வந்த நிலையில், அவர் திடீரென இறந்தது உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அந்த தொடரின் கால் இறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா கையால் அடித்த கோல் மிகுந்த சர்ச்சைக்குள்ளான நிலையில், நடுவரின் கண்களை ஏமாற்றியது ‘கடவுளின் கை’ என்று அவர் சமாளித்தது இன்றளவும் கால்பந்து வரலாற்றில் மறக்க முடியாத நினைவலைகளை எழுப்பிக் கொண்டே தான் உள்ளது. தாய்நாட்டுக்காக 4 முறை உலக கோப்பையில் களமிறங்கி உள்ள அவர், அர்ஜெண்டினா அணியின் பயிற்சியாளராகவும் (2008-2010) செயல்பட்டுள்ளார்.

எதிரணி வீரர்களை சமாளித்து பந்தை கடத்திச் செல்வதிலும், துல்லியமாக கோல் அடிப்பதிலும் மரடோனா வெளிப்படுத்திய அசாத்தியமான திறமை அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்தது. தற்போதைய நட்சத்திரங்கள் மெஸ்ஸி. ரொனால்டோ போன்றவர்களை விடவும் மரடோனாவின் ஆட்டத் திறன் பல மடங்கு சிறப்பானது என்பதே பல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இந்தியாவில் கொல்கத்தா, கண்ணூர் நகரங்களுக்கு அவர் வந்தபோது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து திருவிழா போல கொண்டாடி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகர் என்பதுடன் உள்ளூர் போட்டிகளில் களமிறங்கி கலக்கியவர். மரடோனாவின் கொல்கத்தா வருகையின்போது வரவேற்பு உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தவரும் அவர் தான். பிரதமர் மோடி அஞ்சலி: கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் கங்குலி உட்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: