×

நிவர் புயல் சேதம் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும்: கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கடலூர்: தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்பு குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்திய பிறகு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூரில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கு பின் அளித்த பேட்டி: இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர் மாவட்டம் புயலால் பாதிக்கப்படும் என கூறியதையடுத்து நான் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழங்கிய ஆலோசனையை அடுத்து நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் நிவர் புயலுக்கு 2,999 முகாம்களில் 13 லட்சம் பேர் வரை தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 441 முகாம்களில் 52 ஆயிரத்து 226 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 77 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது. மாவட்டத்தில் 321 மரங்கள் விழுந்துள்ளது. 1613 ஹெக்டர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, 315 ஹெக்டர் மணிலா, 35 ஹெக்டர் வாழை, 8 ஹெக்டர் மர வள்ளி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்ட உடன் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு அந்த தொகை உடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் கம்பங்கள் சீர் செய்யப்பட்டு படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* கடலூர் பகுதியில் 2 மணி நேரம் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் புயல், மழை சேதங்களை பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து காரில் கடலூர் வந்தார். பிற்பகல் 2.30 மணி அளவில் கீழ்குமாரமங்கலம் சென்ற முதல்வர் புயல் காற்றால் 5 ஏக்கரில் முறிந்து கிடந்த வாழை மரங்களை பார்வையிட்டார். பின்னர் தேவனாம்பட்டினம் கடற்கரை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் தங்கி இருந்த மக்களிடம் உணவு, மருத்துவ வசதிகள், குறித்து கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது முதியவர் ஒருவர் முதல்வரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின், கடலூர் துறைமுக பகுதிக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை பார்வையிட்டார். அப்போது மீனவர்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். அதை தொடர்ந்து கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். பிற்பகல் 2.30 மணிக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி 4.30 மணிக்கு ஆய்வை முடித்துக் கொண்டார். பின்னர் பண்ருட்டி வழியாக சேலம் புறப்பட்டார். ஆய்வின்போது, அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கடலூர் கடற்கரை கிராமங்களில் கடல் அரிப்பு மற்றும் அதிகளவு பாதிப்புள்ள பகுதிகளை பார்வையிடவில்லை என புகார் எழுந்துள்ளது.


Tags : Edappadi Palanisamy ,Nivar ,Cuddalore , Cuddalore: Chief Minister Edappadi Palanisamy has said that relief will be provided after a complete survey of the storm damage.
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!