கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சட்டத்தில் திருத்தம்

பெங்களூரு: தவறு செய்துள்ளதை காரணம் காட்டி தற்காலிக பணி நீக்கம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தவறினால், அவர்களை பணிநீக்கம் செய்தது செல்லாததாகிவிடும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசு துறையில் பணியாற்றும் அதிகாரி மற்றும் ஊழியர்கள் லஞ்ச-ஊழலில் சிக்குவது, பணிக்கு சரியாக வராமல் தவிர்ப்பது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது, கடமை தவறியதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் செய்தது, பணியில் அலட்சியமாக இருப்பது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்காக 3 முதல் 6 மாதங்கள் வரை இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. இந்த காலத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி மேலதிகாரிகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை கொடுக்க வேண்டும்.

அந்த அறிக்கையை பரிசீலனை செய்யும் மேலதிகாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரி அல்லது ஊழியர் தவறு செய்துள்ளது உறுதியானால் அரசு சட்ட விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளது. தவறு செய்யாத பட்சத்தில் உடனடியாக இடைக்கால பணி நீக்க உத்தரவு ரத்துசெய்து பணியாற்ற அனுமதி வழங்கும். இதனிடையில் மாநில அரசு துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு காரணங்களுக்காக இடைக்கால பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தும், ஆண்டுகணக்கில் எந்த விசாரணையும் நடத்தி நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், பணியில் தொடர முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர் தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இது பெரியளவில் அரசுக்கு தொல்லையாக மாறியுள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து மாநில அரசின் ஊழியர் நலம் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாணையில், பணியிடை நீக்கம் செய்யப்படுவோர் மீது 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட துறை மேலதிகாரியிடமோ அல்லது நீதிமன்றத்திலோ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் சம்மந்தப்பட்ட அதிகாரி, ஊழியரை பணியிடை நீக்கம் செய்து எடுத்துள்ள நடவடிக்கை காலாவதியாகிவிடும். சம்மந்தப்பட்ட ஊழியர்கள் பணிக்கு வந்தால் அவரை பணியாற்ற அனுமதிக்கவேண்டும். மேலும் நிலுவையில் உள்ள பணியிடைநீக்க புகார்களை உடனடியாக விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக பொது சேவை சட்டம்-1957, 10வது விதியில் திருத்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories: