×

டெல்லி-நொய்டா எல்லையில் கொரோனா சோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி

நொய்டா: டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதி மாநிலங்களில் கொரோனா சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது டெல்லியில் இருந்து வரும் அனைவருக்கும் எல்லையில் கொரோனா சோதனை நடத்தப்படும். ஏனெனில் டெல்லியில் இருந்து இந்த பகுதிக்கு வரும் மக்களால் கொரோனா தொற்று பரவுவதாக கூறப்பட்டது. இதையடுத்து கவுதம்புத்தா நகர் மாவட்டம் சார்பில் நொய்டா எல்லையில் நவம்பர் 18ம் தேதி முதல் சோதனை நடத்தப்பட்டது. இதில் 147 பேருக்கு நடத்திய சோதனையில் டெல்லியில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை டிஎன்டி மேம்பால பகுதியில் 57 பேருக்கு நடந்தது. அதில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள 90 பேருக்கு ஹரிதர்சன் எல்லையில் நடத்தப்பட்டது. அதில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி எல்லை பகுதி மாவட்டங்களில் கொரோனா தொற்று சதவீதம் 4.76 ஆக உள்ளது. இதனால் டெல்லியில் இருந்து வரும் அனைவருக்கும் ரேண்டம் அடிப்படையில் கொரோனா தொற்று சோதனை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லிக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள்
கவுதம்புத்தா நகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி தீபக் ஓரி கூறுகையில்,’ டெல்லியில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை தொடர்ந்து நடைபெறும். இந்த சோதனையின் போது தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் டெல்லிக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களது வீடு நொய்டாவிலோ அல்லது கிரேட்டர் நொய்டாவிலோ இருந்தாலும் அவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள் மட்டும்தான் நொய்டாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும். எல்லையில் சோதனை நடத்த அனைத்து மருத்துவ வசதிகளும் செய்து வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.



Tags : corona test ,border ,Noida ,Delhi , A corona test at the Delhi-Noida border confirmed the infection in 7 people
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...