காசிப்பூர் குப்பைக்கிடங்கு தீவிபத்து கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி சம்மன்

புதுடெல்லி: காசிப்பூர் குப்பைக்கிடங்கு தீவிபத்து தொடர்பாக சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி முன்பு ஆஜராகும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கிழக்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட காசிப்பூர் குப்பைக்கிடங்கில் செவ்வாய் இரவு தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ புதன்கிழமைதான் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் கிழக்கு டெல்லி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த பிரச்னையில் சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லி சட்டசபை சுற்றுச்சூழல் கமிட்டி தலைவர் அடிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காசிப்பூர் குப்பைக்கிடங்கு தீவிபத்து குறித்து சட்டசபை கமிட்டி முன் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கிழக்கு டெல்லி மாநகராட்சி கமிஷனருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை முடிந்த பிறகு சட்டசபை கமிட்டி குழு தீவிபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்ய உள்ளது. ஏனெனில் தீ விபத்தால் கிழக்கு டெல்லி முழுவதும் புகை மண்டலமாக மாறிகடுமையான காற்று மாசு ஏற்பட்டது. கிழக்கு டெல்லி மாநகராட்சியின் மிக மோசமான நிர்வாகத்தால்தான் இந்த பிரச்னை உருவானது. தொடர்ந்து அந்த பகுதியில் குப்பைகளை கொட்டி குவித்து வருகிறார்கள். இதனால் தீ விபத்திற்கு பொறுப்பு ஏற்பது யார்?. இந்த விவகாரத்தில் பொறுப்பான அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் கடந்த 6 நாட்களாக டெல்லியில் காற்றுத்தரம் மேம்பட்டுவந்த சூழலில் காசிப்பூர் குப்பை கிடங்கு தீவிபத்து ஒட்டுமொத்த காற்றின் தரத்தையும் மிகவும் அபாயகரமாக மாற்றி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: