×

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே மாதத்தில் 2,364 பேர் பலி

புதுடெல்லி:கொரோனா தொற்று முதல் அலை ஜூன் மாதம் வரை டெல்லியில் ஒருவித தீவிரத்தை உருவாக்கி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. அதன் பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா களமிறங்கியதில் நிலமை கட்டுக்குள் வந்தது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததை அடுத்து, டெல்லி மாடல் வெற்றி பெற்றுள்ளது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அந்த பூரிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தகர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டி மிரட்டியது. பாதிப்பு 4,000 வரை தொடர்ந்து அதிகரித்த நிலையில் கொரோனா 2ம் அலை வீசுகிறது, இன்னும் சில நாட்களில் குறையும் என மாநில சுகாதார அமைச்சர் ஜெயின் கூறினார்.
அதன்படி நிலைமையின் தீவிரமும் குறைந்தது. எனினும், அடுத்த ஓரிரு வாரங்களில் அதாவது அக்டோபர் 28ம் தேதியன்று பாதிப்பு எண்ணிக்கை 5,000க்கும் அதிகம் சென்றதால், 3ம் அலை தொடங்கியுள்ளது என முதல்வர் கெஜ்ரிவல் அறிவித்தார். மூன்றாவது அலையில், இதுவரை இல்லாத வகையில் 8,593 பேர் 11ம் தேதி பாதிக்கப்பட்டனர்.

பாதிப்புக்கு நிகராக பலி எண்ணிக்கையும் 100ஐ தாண்டி மிரட்டியது. தொடர்ந்து 5 நாட்களாக 100க்கும் அதிக பலி எண்ணிக்கை நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பலி 99 ஆக குறைந்தது. இந்நிலையில், அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 30 நாட்களில் மட்டும் 2,364 பேர் பலியாகி உள்ளனர் என மாநில சுகாதார துறை புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு உள்ளது. கடந்த 7 மாத பலி 8,720 என்றும் அதில் 2,364 பேர் கடந்த 30 நாட்களில் பலியாகி இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இருப்பது அறியாமல் இருந்து நிலைமை தீவிரம் அடைந்த பின் மருத்துவமனையில் சேர்ப்பு, மருத்துவமனைகளில் ஐசியு படுக்கை தட்டுப்பாடு, மோசமான வானிலை, காற்று மாசு அபாயம் என பல்வேறு காரணிகளால் பலி அதிகரித்ததாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பலிகளை ஆய்வு செய்து, இறப்புகளை குறைக்கும் பரிந்துரைகளை கூறும்படி வல்லுநர்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளது கவனிக்கதக்கது.

Tags : Corona , Corona infection kills 2,364 people in a single month
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...