×

சென்னை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளில் நிவர் புயலால் 10 லட்சம் பேர் பாதிப்பு

* வீடுகளில் புகுந்த வெள்ளம், மின்சார துண்டிப்பால் அவதி
* 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்
* தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் கண்ணீர்


சென்னை: நிவர் புயலால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், புதுவை பகுதிகளில் வீடுகளில் புகுந்த வெள்ளம், மின்சார துண்டிப்பால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் கண்ணீர் வடித்தனர். இம்மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளன.  வங்ககடலில் கடந்த 16ம் தேதி உருவான காற்றழுத்தம் தீவிரமடைந்து நிவர் புயலாகவும் அதி தீவிர புயலாகவும் மாறியது. இது நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 2.30 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையை கடந்தது. இந்தப் புயல் திருவண்ணாமலை, வேலூர் பகுதி வழியாக தெற்கு ஆந்திரா பகுதிக்குச் சென்றது. இதனால், புதுவை மற்றும் விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, திருண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டியதால் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட 23 இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. உடனடியாக, மீட்புக்குழுவினர் மரங்களை அகற்றினர். இதனிடையே, இடை விடாமல் கொட்டி தீர்த்த மழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் திண்டாடினர். விழுப்புரம் தாமரைகுளம் பகுதியில் சுமார் 500 வீடுகளைதண்ணீர் சூழ்ந்தது. அதேபோல் கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலம், புதிய பேருந்து நிலையம், சாலாமேடு உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. விக்கிரவாண்டி-கும்பகோணம் நான்கு வழிச்சாலை திட்டப்பணிகளால் வாணியம்பாளையம், புருஷானூர், மழவராயனூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி சுமார் 5000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், வாழை, முருங்கை போன்ற மரங்களும் 500 ஏக்கர் அளவுக்கு சேதமடைந்தன.

புதுவை அருகே கடற்கரையோரம் உள்ள தமிழக பகுதியான சின்னமுதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் போன்ற இடங்களில் கடல் சீற்றத்தால் 10 வீடுகள் இடிந்தன.
கடலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. புயல், மழையால் பாதிக்கப்பட்ட 55 ஆயிரத்து 226 பேர் 21 பல்நோக்கு சிறப்பு முகாம் உள்ளிட்ட 441 முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். மாவட்டம் முழுவதும் 321 மரங்கள் முறிந்து விழுந்தன. 12 கால்நடைகள் உயிரிழந்தன. மலை கிராமங்களான ராமாபுரம், எம்.புதூர், ேஜடர்பாளையம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதியில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன. மணிலா மற்றும் பன்னீர் கரும்பு சாகுடியும் பாதிக்கப்பட்டது. 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. புயல், மழையால் நேற்று முன்தினம் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று மாலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. சொத்திக்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேடடை உள்ளிட்ட இடங்களில் கடல் நீர் கிராமத்திற்குள் புகுந்ததால் படகுகள் சாலை பகுதிக்கு அடித்து செல்லப்பட்டன. 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

புதுச்சேரி நகரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. விடியவிடிய பெய்த மழையில் இந்திராகாந்தி சிலையை சுற்றி திடீர் ஏரியே உருவாகிவிட்டது.  வேலூர் மாவட்டத்தில் 36 வீடுகள் இடிந்து விழுந்தன. பலத்த காற்று வீசியதால் 26.53 ஏக்கர் வாழை, பப்பாளி மரங்கள் சேதமானது. 10 மின்கம்பங்கள், 57 மரங்கள் முறிந்து விழுந்தது. 25 முகாம்களில் 1,021 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை, கீரை உட்பட 17,300 ஏக்கர் பயிர்கள் மழையில் சேதமடைந்தது. 4 கால்நடைகள் இறந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வீடுகள் இடிந்து விழுந்தன. நெல், வாழை உட்பட 30ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமானது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. 12 கால்நடைகள் இறந்தன.4 மாவட்டங்களிலும் நிவர் புயல் பாதிப்பு காரணமாக பெய்த தொடர்மழை, பலத்த காற்றினால் 77 வீடுகள் இடிந்து விழுந்தன.

மொத்தம் 47ஆயிரத்து 338 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது. தொடர்ந்து விவசாய பயிர்கள் பாதிப்பு, கால்நடை பாதிப்பு, மின்கம்பங்கள் சேதம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு, காத்திருப்பு, அல்லிவிளாகம், ராதாநல்லூர், இளையமதுக்கூடம், நடராஜபிள்ளை, சாவடி, நாங்கூர், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடபபட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 300 ஏக்கர் செங்கரும்புகள் வயலில் சாய்ந்தன. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை நிவர் புயல் தாக்காததால் அங்கு பாதுகாப்பாக உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்பிலான ஒரு லட்சம் டன் உப்பு தப்பியது.

சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி, முடிச்சூர், தாம்பரம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் முழுமையாகவும், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சிறுதாவூர், கோட்டூர்புரம், மாம்பலம், புரசைவாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், ஆர்.கே.நகர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் மக்கள் வெள்ளநீரால் உணவு, உடைகள் இன்றி பாதிக்கப்பட்டனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால், அவர்கள் கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அடுத்த ஓரிரு நாட்களில் அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு வெள்ள நீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதோடு, செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், நெம்மேலி, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் பப்பாளி, வெண்டை, கத்திரிக்காய், மிளகாய் உள்ளிட்ட விளைபொருட்கள் பயிரிடப்பட்ட 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. இதனால் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி களை வழங்க வேண் டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் இரு மாவட்டங்களிலும் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளது. வேலூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால், 9 மணி நேரத்திற்கு மேலாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்  துணை மின் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம்  உள்பட மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் கோளாறை சரி செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு அல்லது இன்று காலை மின்கோளாறு சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : storm ,Chennai ,Nivar ,Cuddalore ,areas ,Puthuvai ,Thiruvannamalai ,Vellore , Chennai, Cuddalore, Thiruvannamalai, Vellore and Puthuvai 10 lakh people affected by Nivar storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...