×

கொரோனா ஊரடங்கு முடிய 3 நாட்களே உள்ள நிலையில் கலெக்டர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை: கூடுதல் தளர்வுகள் அறிவிக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையை தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் மார்ச் 25ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 248 நாட்கள் அதாவது சுமார் 8 மாதங்களாக கொரோனா ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகள் மற்றும் மால் திறப்பது, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி, ரயில், பேருந்து, ஆட்டோ, கார் ஓட அனுமதி, கோயில்களை திறந்து வழிபாட்டுகளுக்கு அனுமதி, தியேட்டர் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி என பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளிகள்,  மெரினா கடற்கரை, நீச்சல்குளம், டாஸ்மாக் பார் உள்ளிட்ட சிலவற்றுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அறிவித்துள்ள ஊரடங்கு வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதையடுத்து டிசம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிப்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதுபற்றி விவாதிக்க நாளை காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி, டாஸ்மாக் திறக்க அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முதல்வர் எடப்பாடி திட்டமிட்டுள்ளார். மேலும், முக்கியமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளை வருகிற ஜனவரி மாதம் முதல் திறக்கலாமா? என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு அறிவிக்கப்பட உள்ள புதிய தளர்வுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற 29 அல்லது 30ம் தேதி முதல்வர் எடப்பாடி அறிவிப்பார்.



Tags : Chief Minister ,Corona ,collectors , Within 3 days of the end of the corona curfew CM consults with collectors tomorrow: Extra Plan to announce relaxations
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...