25 நாட்களில் சவரனுக்கு1168 குறைந்தது: மேலும் குறைய வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை கடந்த 2ம் தேதி முதல் நேற்று வரை சுமார் 25 நாட்களில் சவரன் 1168 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.கொரோனா பாதிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி ஒரு சவரன் ₹43,328க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றின் அதிகப்பட்ச விலை ஆகும். அதன் பிறகு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக காணப்பட்டது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே நேரத்தில் உயர்ந்த வேகத்தில் குறையும் நிலையும் இருந்து வந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில், அதாவது கடந்த 2ம் தேதி ஒரு சவரன் 38,072க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு விலை ஏறியும், இறங்கியும் இருந்து வந்தது.

கடந்த 23ம் தேதி ஒரு சவரன் 37,984, 24ம் தேதி 37,120க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் விலை குறைந்து கிராமுக்கு 26 குறைந்து ஒரு கிராம் 4,614க்கும், சவரனுக்கு 208 குறைந்து ஒரு சவரன் 36,912க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று 4வது நாளாக தங்கம் விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் 4,613க்கும், சவரனுக்கு 8 குறைந்து ஒரு சவரன் 36,904க்கும் விற்கப்பட்டது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை மட்டும் சுமார் 25 நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 146, சவரனுக்கு 1,168 அளவுக்கு குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை குறைய தான் அதிக வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Related Stories: