×

தமிழ்நாட்டில் தமிழ்மொழியை கற்கக்கூடாதா? கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடர்பான வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தமிழ்மொழி கற்பிக்கப்படும் என திருத்தம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொன்குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.  அதில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. அதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி கற்றுக்கொடுப்பதில்லை.  

கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் தமிழ்மொழியை கட்டாய கல்வி மொழியாக ஆக்க வேண்டும். கேந்திரிய பள்ளியில் தமிழ் ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க உத்தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டது. இங்கு படிக்கும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். விருப்பப்பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என வாதிட்டார். அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிரெஞ்சு, ஜெர்மனி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்மொழியை கற்கக்கூடாதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், இது போன்ற பதிலை நாங்கள் ஏற்கமாடோம் என்றும் கூறினர். பிரதமர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறுகிறார், ஆனால் இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.  இப்படியே சென்றால் வரும்காலத்தில் தமிழ்மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப்பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது. தமிழ்மொழியை மட்டும் நாங்கள் கேட்கவில்லை. அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் விரிவான உத்தரவிற்காக வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Tags : Tamil Nadu ,ICC Madurai ,Kendriya Vidyalaya School , Shouldn't Tamil be studied in Tamil Nadu? ICC Madurai branch question in the case related to Kendriya Vidyalaya school
× RELATED தமிழகம் முழுவதும் பொங்கல்...