நீடாமங்கலம் பகுதியில் நெல் பயிர்கள் அழுகும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் நிவர் புயல் தாக்கம் இருக்கும் என்று நேற்று பொதுமக்கள் மரக்கிளைகளை வெட்டி வாழை, தென்னை போன்ற மரங்களை பாதுகாத்தனர். தங்கள் வீடுகளை பாதுகாக்க படுதாக்களை வாங்கி வீடுகளில் கட்டி இரவு முழுவதும் பாதுகாத்து வந்தனர். மேலும் வீட்டிற்கு தேவையான உணவு பொருள்களையும் முன்கூட்டி சேகரித்து வைத்திருந்தனர். நேற்றிரவு புயல் காற்று அதிகம் இல்லாததால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நீடாமங்கலம் பகுதியில் 68.6 மில்லி மீட்டர் தொடர் மழை பெய்தது. இதனால் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சுமார் 23 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பகுதி, சித்தமல்லி, பரப்பனாமேடு, பூவனூர், காணூர், அன்னவாசல், மேலாளவந்தசேரி, அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் ஏக்கர் இளம் நடவு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. பல இடங்களில் வடிகால் தூர் வாராமல் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது. இன்று காலை மழை பெய்யாததால் பல இடங்களில் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை விவசாயிகள் வடியவைக்க தொடங்கியுள்ளனர்.தொடர்ந்து மழை பெய்தால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்று இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

Related Stories:

>