×

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர் உடலை பார்க்க, சடங்கு செய்ய அனுமதி: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்கள் உடலை நெருங்கிய உறவினர்கள் பார்ப்பதற்கும், மத ரீதியான சடங்குகளை நடத்தவும் சுகாதாரத்துறை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்தாலும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதில் அரசு கடும் கெடுபிடிகளை கடைபிடித்து வருகிறது.

இறந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில்லை. பல அடுக்கு பாதுகாப்பு கவசம் அணிந்து, கிருமி நாசினி அதிகளவில் தெளித்து, 10 அடி ஆழ குழியில் புதைக்கப்படும். அல்லது எரியூட்டப்படும். இந்த வேலையை துப்புரவு பணியாளர்கள் தான் செய்கின்றனர். நெருங்கிய உறவினர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கேரள அரசு சில தளர்வுகளை அறிவித்து உள்ளது. அதன்படி கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், கொரோனாவால் இறந்தவரின் உடலை சுத்தம் செய்யும்போது நெருங்கிய உறவினர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதி அளிக்கப்படும்.

அப்போது புனித நீர் தெளிக்கவும், வெள்ளை துணி போர்த்தவும் அனுமதி அளிக்கப்படும். அருகில் செல்லும்போது கவச உடை அணிந்திருக்க வேண்டும். உடலை தொடவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. உடலை சுத்தம் செய்த பின்னர் தனி அறையில் வைத்து உடலை பார்க்கலாம். சவக்கிடங்கு அல்லது மயானத்தில் வைத்து உடலை பார்க்க அனுமதி அளிக்கப்படும். இந்த நேரத்தில் மதரீதியான சடங்குகள் செய்யவும், புனித நீர் தெளிக்கவும் அனுமதிக்கப்படும். உடலை தொட அனுமதியில்லை. இறுதி நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் 2 மீட்டர் இடைவெளியில் நிற்க வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,government , Kerala government orders permission to visit corpse
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...