×

கன்னியாகுமரியில் 8 மாதத்துக்கு பிறகு தொடக்கம்; படகில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்: கடல் அழகையும் கண்டு ரசித்தனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 8 மாதங்களுக்கு பிறகு படகு சேவை தொடங்கி உள்ளது. இன்றுகாலை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயைதடுத்து நாளுக்கு நாள் வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்காமல் இருந்தது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் படகு போக்குவரத்து தொடங்கியது.

நேற்று ஒரே ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் 2வது நாளாக இன்றும் படகு போக்குவரத்து காலையில் தொடங்கியது. தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இன்று 2 படகுகள் இயக்கப்பட்டன.  கன்னியாகுமரிக்கு அதிகாலை படையெடுத்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை குடும்பமாக கண்டு ரசித்தனர். பின்னர் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வகையில்  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அதன்படி படகு போக்குவரத்து கழக டிக்கெட் கவுன்டரில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் மாஸ்க் அணிந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து படகு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து எம்எல் குகன், எம்எல் விவேகானந்தர படகுகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் படகில் ஏற்றப்பட்டனர். ஒரு படகில் 150 பேர் பயணிக்கும் நிலையில் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். படகில் பயணம் மேற்கொண்ட  சுற்றுலா பயணிகள் கடல் அழகையும் விவேகானந்தர் பாறையையும் கண்டுரசித்தனர். கடல் நீர்மட்டம் பிரச்னை காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் நின்றபடி திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

தூரத்தை அதிகப்படுத்த வேண்டும்
கன்னியாகுமரி தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது: உலகத்தில் எங்கும் காணமுடியாத சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கன்னியாகுமரில் ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது. விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்கி வருகிறது. தற்போது 92 அடி நீளத்தில் 2 சொகுசு படகுகள் புதியதாக வாங்கப்பட்டுள்ளன. இந்த படகுகளை சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவை காணவும் பயன்படுத்த வேண்டும்.

காலை சூரிய உதயம் நேரத்தில் கன்னியாகுமரி முதல் வட்டக்கோட்டை வரையிலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தில் கன்னியாகுமரி முதல் மணக்குடி வரையிலும் படகு சேவையை நீட்டித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கன்னியாகுமரிக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றனர். பேட்டியின் போது தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க செயலாளர் வக்கீல் ராஜேஷ், பொருளாளர் ஜான்கென்னடி உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கொரோனா படுத்திய பாடு
தற்போது சபரிமலை சீசன் ஆகும். இந்த நேரத்தில் கன்னியாகுமரியில் கூட்டம் களைகட்டும். ஆயிர கணக்கான வாகனங்களில் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் கூடுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஐயப்ப பக்தர்கள் கூட்டம் இல்லாமல் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanyakumari ,sea , Start after 8 months in Kanyakumari; Tourists are eager to travel by boat: enjoy the beauty of the sea
× RELATED பொங்கல் விடுமுறையால் படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்