கொங்கராயகுறிச்சி வழியாக கேரளாவுக்கு 15 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற லாரி பறிமுதல்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்

ஸ்ரீவைகுண்டம்: கொங்கராயகுறிச்சி வழியாக கேரளாவுக்கு 15டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற லாரியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கொங்கராயகுறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தார்ப்பாய் போட்டு மூடிய நிலையில் லாரி சென்று வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் திரண்டு நேற்று இரவில் அந்தப் பகுதி வழியாக வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்த சிலரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் லாரியில் ஏறி சோதனையிட்டபோது அதில் ரேசன் அரிசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வைகுண்டம் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறையினர் நடத்திய சோதனையில் அந்த லாரியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ரேசன் அரிசி மூடைகளும் மேல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட கோதுமை உமி மூடைகளும் இருந்தது தெரியவந்தது. மேலும், லாரியில் கொண்டு செல்லப்படும் அனைத்தும் கோதுமை உமி மூடைகள் என்றும், அவை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ரசீதுகளையும் வருவாய் துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து வருவாய் துறையினர் லாரியை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரேசன் அரிசி கடத்தப்பட்டது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தப்பட்டது குறித்து தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவை பொருத்தவரையில் மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது ரேசன் அரிசி கடத்திச் சென்ற லாரியை பறிமுதல் செய்துள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

நெல்லை திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம், புளியங்குளம், கருங்குளம், செய்துங்கநல்லூர், கிருஷ்ணாபுரம், வி.எம்.சத்திரம் என அடுத்தடுத்து சோதனை சாவடிகள் பல உள்ளன. இதனால் ரேஷன் அரிசியை கடத்தி செல்ல கொங்கராயகுறிச்சி வழித்தடத்தை கடத்தலில் ஈடுபட்டவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் லாரி வந்து சென்றது என அப்பகுதி மக்கள் கூறுவதால், ரேஷன் அரிசி கடத்தல் எவ்வளவு நாட்களாக நடைபெறுகிறது, யார் யார் அதில் சம்பந்தப்பட்டு உள்ளார்கள் என்பதை விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்பாகும்.

தாமிரபரணி மணல் என நினைத்த மக்கள்

தாமிரபரணி ஆற்றின் கொங்கராயகுறிச்சி பகுதியில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள ஆற்று மணலை கடந்த காலங்களில் பைக் முதல் கனரக வாகனங்களில் மணல் கொள்ளையர்கள் அதிக அளவில்  அள்ளிச் சென்றனர். இதை அப்பகுதி மக்கள் தடுத்து அம்மணலை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகின்றனர். 2015ம் ஆண்டு வைகுண்டம் அணை தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் கொங்கராயகுறிச்சி பகுதியில் உள்ள மணலை கொள்ளையடிக்கவே முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையும் அப்பகுதி மக்கள் சாதி மத வேறுபாடின்றி தொடர்ந்து போராடி அந்த முயற்சிகளை தடுத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கொங்கராயகுறிச்சி வழியாக கனரக லாரி சென்று வருவதை கண்ட அப்பகுதி மக்கள் மீண்டும் மணல் கொள்ளை நடைபெறுவதாக நினைத்தே அந்த லாரியை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர்தான் லாரியில் கடத்திவந்தது ரேசன் அரிசி என தெரியவந்தது.

Related Stories:

>