17 வயது சிறுமிக்கு பிறந்து புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுப்பு: பந்தலூர் அருகே பரபரப்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பிறந்து புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தாசில்தார், டி.எஸ்.பி. முன்னிலையில் போலீசார் தோண்டி எடுத்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் உப்பட்டி புஞ்சவயல் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பம் ஆக்கியதாக பந்தலூர் பகுதியை சேர்ந்த திருச்செல்வம் (23) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது திருச்செல்வம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுமிக்கு கடந்த 21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.

சிறுமியின் பெற்றோர் பிதர்காடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை எடை குறைவாக பிறந்ததாக கூறி மருத்துமனை நிர்வாகம் ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிறுமிக்கு 19 வயது ஆனதாகவும், திருமணம் ஆனதாகவும் கூறி மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது. போக்சோ வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இறந்த குழந்தையை போலீசாருக்கு தெரியாமல் சிறுமியின் வீட்டின் அருகே புதைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பின் தேவாலா காவல் நிலையத்தில் பந்தலூர் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்தார். அதன்பேரில் நேற்று பந்தலூர் தாசில்தார் மகேஷ்வரி, தேவாலா டி.எஸ்பி. அமிர் அகமது தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருஞானசம்மந்தம், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் பந்தலூர் அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவர் கிருஷ்ணராஜ் பிரேத பரிசோதனை செய்து குழந்தையின் இடது காலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: