ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார் கால்பந்து சூப்பர் ஸ்டார் மாரடோனா: விளையாட்டு உலகம் கண்ணீர் அஞ்சலி

பியூனோஸ் ஏரோஸ்: கால்பந்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை  கொண்ட  அர்ஜென்டினாவின் டீகோ மாரடோனா, தனது 60வது வயதில் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  சர்வதேச விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த 1986ம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில், டீகோ மாரடோனா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். அந்த தொடரில் அனைத்து போட்டிகளிலும் அவரது ஆட்டம், இன்றளவும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இன்றளவும் அவரை கொண்டாடி வருகின்றனர். அந்த தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த கோல், ‘இந்த நூற்றாண்டின் சிறந்த கோல்’ என சர்வதேச கால்பந்து கழகம் (ஃபிபா) அங்கீகரித்துள்ளது. ஆனால் அப்போட்டியில் அவரது முதலாவது கோல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தலையால் பந்தை முட்டிய போது, பந்து அவரது இடது கையில் பட்டு கோலானது. அது ரீப்ளேயில் நன்றாகத் தெரிந்தது. அப்போது அதை ‘கடவுளின் கை’ என்று மாரடோனா கூறினார். ஒரு நாட்டின் கால்பந்து அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர் என்ற சாதனை இன்றளவும் மாரடோனாவிடமே இருக்கிறது.

அர்ஜென்டினாவுக்காக 91 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள அவர், 16 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 1990ம் ஆண்டு இத்தாலியில் நடந்த உலகக்கோப்பையிலும் அர்ஜென்டினா பைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் அப்போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் கோப்பையை இழந்தது. அப்போட்டி முடிவில் மாரடோனா கண்ணீர் விட்டு அழுதார். அப்போது அவருக்காக உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும் கண்ணீர் சிந்தினர். ஓய்வுக்கு பின்னர் கடந்த 2008ம் ஆண்டு முதல் அர்ஜென்டினாவின் கால்பந்து அணிக்கு அவர் பயிற்சியாளராக இருந்தார். அதற்கு முன்னதாக போதை மருந்து சர்ச்சையில் சிக்கி கைதானார்.

பின்னர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது வரை அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து கிளப்பான ஜிம்னாசியாவின் பயிற்சியாளராக இருந்தார். கடந்த அக்.30ம் தேதி, தனது 60வது பிறந்தநாளை, ஜிம்னாசியா கிளப் வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். நவ.2ம் தேதி வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். எழுந்து நடக்கவே இயலாத நிலையில் இருந்த அவரை, இரு வீரர்கள் தோளில் கை கொடுத்து, ஆம்புலன்சில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில், அவரது மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மூளையில் லேசான ரத்தக்கசிவு இருந்தது.

இதையடுத்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அன்று அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனை முன்பு திரண்டு விட்டனர். அவர் நலம் பெற வேண்டி உருக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.  அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய அவரை, அவரது மகள் ஜியானினா கவனித்துக் கொண்டார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் அறிவித்தனர். டீகோ மாரடோனாவின் திடீர் மரணம், கால்பந்து ரசிகர்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

சர்வதேச விளையாட்டு வீரர்கள் அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். பிரேசிலின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே, ‘இன்று எனக்கு சோகமான செய்தி. எனது நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன். அவருடன் சொர்க்கத்தில் நான் நிச்சயம் கால்பந்து விளையாடுவேன்’ என்று தனது அஞ்சலி செய்தியில் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘என்னுடைய ஹீரோ இன்று இல்லை. உங்களால்தான் நான் கால்பந்து விளையாட்டை பார்க்கத் துவங்கினேன். அமைதியாக ஓய்வெடுங்கள்’ என்று ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெண்டுல்கர் தனது பதிவில், ‘கால்பந்து உலகமும், விளையாட்டு உலகமும் இன்று மிகச்சிறந்த வீரரை இழந்திருக்கிறது. உங்களை நாங்கள் இழந்திருக்கிறோம்’ என்று அஞ்சலி செலுத்தியுள்ளார். யுவராஜ் சிங், முகமது கைஃப், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும், கேரி லினேகர், ரொனால்டோ உள்ளிட்ட சர்வசேத கால்பந்து வீரர்கள் பலரும் மாரடோனாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரடோனாவின் மறைவையடுத்து, நாடு முழுவதும் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அர்ஜென்டினா அரசு அறிவித்துள்ளது.

Related Stories: