வீரபாண்டி முல்லை ஆற்றில் எச்சரிக்கையை மீறும் சுற்றுலாபயணிகள்: தடையை மீறி குளிப்பதால் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் அபாயம்

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லை பெரியாற்றில் தடையை மீறி சுற்றுலா பயணிகள் குளிப்பதால் ஆபத்து அதிகரித்துள்ளது. தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்று தடுப்பணை உள்ளது.  ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் போது தடுப்பணையை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள்  வருவது வழக்கம். தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1555 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  இந்த தண்ணீரானது வீரபாண்டி தடுப்பணை வழியாக மூல  வைகையாற்றில்  கலந்து வைகை அணையை சென்றடைகிறது. முல்லை பெரியாறு அணையில் திறந்து விடப்பட்டுள்ள நீர் வீரபாண்டி தடுப்பணையில் வெள்ளமென பெருகி வருவதால் இப்பகுதியில் குளிப்பதற்கும் ஆற்றுக்குள் இறங்கி படம் பிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.  மேலும் வீரபாண்டி ஆற்றுக்குள் யாரும் செல்லாதபடி அனைத்து வழியும் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக நேற்று முதல் 5 நாட்களுக்கு வீரபாண்டி  முல்லை ஆற்றுக்குள் யாரும் செல்லக்கூடாது என காவல்துறை தடை விதித்துள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஐந்து காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தேனியில் இருந்து  வீரபாண்டி வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்கள் முல்லைப் பெரியாறு தடுப்பணை அழகை கண்டு ரசிப்பதற்காக ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன.  இதில் சில பயணிகள் தடுப்பை தாண்டி தடுப்பணையை நோக்கி சென்று குளிப்பதை வாடிக்கையாக்கி வருகின்றனர். இதனை தடுக்க ஊர்க்காவல் படை போலீசார் இருந்தாலும் அவர்களையும் மீறி சிலர் ஆற்றுக்குள் இறங்கி விளையாடுகின்றனர்.  முல்லைப் பெரியாற்றில் விளையாட்டாக குளிப்போர் பலர் ஆற்று நீரில் இழுத்துச் சென்று உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில்,  உயிர் இழப்பை தவிர்க்க காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: