குளித்தலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது குறுகிய கட்டளை மேட்டு இரட்டை வாய்க்கால் பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: அகலப்படுத்த கோரிக்கை

குளித்தலை: குளித்தலை- மணப்பாறை சாலையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குறுகிய கட்டளைமேட்டு ரெட்டை வாய்க்கால் பாலத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை மணப்பாறை சாலையில் வை புதூர் அருகே உள்ளது கட்டளை மேட்டு இரட்டை வாய்க்கால் பாலம். இந்த வாய்க்கால் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இதன் வழியாகத்தான் மதுரை, துவரங்குறிச்சி, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, தோகமலை, தரகம்பட்டி, கடவூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் செல்கின்றன.

அதே போல் சென்னை, பெரம்பலூர் வழியாக துறையூர், முசிறி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கரூர் ஆகிய பகுதியில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியாக செல்லும் பொழுது குளித்தலை-மணப்பாறை சாலையில் உள்ள கட்டளை மேட்டு இரட்டைவாய்க்காலை கடந்து தான் செல்ல வேண்டும். மேலும் நெடுஞ்சாலைத்துறை தற்போது வாகன நெரிசலை போக்குவதற்காக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, துவரங்குறிச்சி, மணப்பாறை, குளித்தலை, முசிறி, துறையூர், பெரம்பலூர் சென்று சென்னை தேசிய நெடுஞ்சாலையை அடையும் வழியாகவும் அதேபோல் எதிர் மார்க்கத்தில் சென்னை, பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை, துவரங்குறிச்சி வழியாக மதுரை சாலையை இணைக்கும் வகையில் இச்சாலை உள்ளது.

இதனால் சென்னை, மதுரை மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் திருச்சி நகருக்குள் செல்லாமல் செல்வதால் கிட்டத்தட்ட 50 கிமீ வாகன ஓட்டிகளுக்கு மிச்சப்படுத்தும் நிலை வருகிறது. இந்நிலை கருதி நெடுஞ்சாலைத்துறை துவரங்குறிச்சியில் இருந்து பெரம்பலூர் வரை உள்ள 100க்கும் மேற்பட்ட குறுகிய பாலங்களை அகலப்படுத்தி வந்துள்ளன. இதே கட்டளை மேட்டு இரட்டை வாய்க்காலில் ஒரு வாய்க்கால் அகலப்படுத்தி கட்டப்பட்டது. மற்றொரு வாய்க்கால் அகலப்படுத்த படாமல் கிடப்பில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் கிராமப்புற வாகனங்கள் கடந்து செல்கின்றன.

குறுகிய பாலம் என்பதால் எந்நேரமும் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த நிலையில் உள்ள கட்டளை மேட்டு இரட்டை வாய்க்கால் பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தஷீலாவிஜயகுமார். சந்திரமோகன், முருகேசன், சங்கீதா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: