×

தரம் உயர்த்தியும் தரமில்லை ஜெனரேட்டர் வசதி இல்லாத அரசு மருத்துவமனை: திருப்பரங்குன்றத்தில் நோயாளிகள் அவதி

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 60 படுக்கைகளுடன் கூடிய 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் கடந்த மார்ச் இறுதியில் கூடுதல் 40 படுக்கைகளுடன் கூடிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், இந்த மருத்துவமனை இன்னும் பெயரளவில் மட்டுமே 24 மணி நேர அரசு மருத்துவமனையாக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, இப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்த மருத்துவமனைக்கு சிசிச்சை பெற வருகின்றனர். விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு சென்றால் அவசர சிகிச்சைக்கு என தனி வார்டு இல்லை. அத்துடன் அதற்குரிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும்பாலும் வேறு மருத்துவம்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் தேவையான ஜெனரேட்டர் வசதி இல்லாததல் இரவில் அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத நிலையும் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த முருகன் கூறுகையில்,`` 24 மணி நேர அரசு மருத்துவமனை என பெயரளவில் மட்டுமே உள்ளது. அவசர சிகிச்சை பிரிவு இல்லாமலும் 24 மணி நேர அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமின்றி ஆரம்ப சுகாதார நிலையமாக மட்டுமே வெறும் காய்ச்சல்க்கு மருந்து கொடுப்பது, சிறிய காயங்களுக்கு கட்டு போடுவது, மகப்பேறு உள்ளிட்ட சில பிரிவுகள் மட்டுமே செயல்படுகிறது. முழுமையான விபத்து அவசர சிகிச்சை பிரிவு செயல்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில்அவசர சிகிச்சை தேவைப்படுவோர் கடும் சிரமத்திற்க்கு ஆளாகின்றனர்.

சில நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் வேறு மருத்துவமனை கொண்டு செல்லும் முன் மரணமடையும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன. மேலும் ஜெனரேட்டர் வசதி இல்லாததால் இரவு நேரத்தில் நோயாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்’’ என்று கூறினார். எனவே, திருப்பரங்குன்றம் மருத்துவமனயை 24 மணி நேர விபத்து அவசர கால சிகிச்சை மருத்துவமையாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Hospital ,facility ,Generator ,Thiruparankundram , Upgraded, substandard, generator facility, non-existent, government hospital
× RELATED முற்றுகை போராட்டம்