திருமயம் பகுதியில் விபத்தை ஏற்படுத்திய வேகத்தடைகளுக்கு அழியாதபடி வர்ணம்

திருமயம்: தினகரன் செய்தி எதிரோலியால் திருமயம் பகுதியில் வர்ணம் பூசாத வேகத்தடைகள் அனைத்தும் எளிதில் அழியாத வகையில் வர்ணம் பூசப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தாலுகா அலுவலம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நூலகம், கடைகள் அதிகம் இருப்பதால் அப்பகுதியில் பள்ளி மாணவிகள், மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் இருக்கும். மேலும் இதன் வழியாக தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து மதுரைக்கு அதிகளவு பஸ்கள், வாகனங்கள் சென்று வருவதால் அப்பகுதியில் நடமாடும் மக்கள் சாலையை கடக்க அஞ்சி வந்த நிலையில் பொதுமக்கள், பள்ளி மாணவிகள் நலன் கருதி அப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறியும் வகைளில் வர்ணம் பூசாததால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த வாரம் நெடுஞ்சாலை துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தில் வாகன ஓட்டிகள் வேகத்தடையை முன்கூட்டியே அறியும் வகையில் எச்சரிக்கை பலகை வைத்ததோடு, வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது.

இந்நிலையில் வேகத்தடையில் வர்ணம் பூசி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் வர்ணம் முற்றிலும் அழிந்து பழைய நிலைக்கு மாறியது. இதனால் மீண்டும் வேகத்தடையால் விபத்து ஏற்பட்டது. இதுபற்றி கடந்த 21ம் தேதி தினகரன் நாளிதழில் பாதிக்கப்பட்டவர் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையால் திருமயம் பகுதியில் வர்ணம் பூசாமல் இருந்த வேகத்தடையில் அதிகாரிகள் எளிதில் அழியாத வர்ணம் பூசினர். இது அப்பகுதி வாகன ஓட்டிகளை நிம்மதியடைய செய்தது. எனவே மக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட தினகரன் நாளிதழ், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: