×

வற்றாத ஜீவநதிக்கு நேர்ந்த கதி தாமிரபரணி கரையோரத்தை சீரழிக்கும் ஸ்ரீவை. பேரூராட்சி: பூனைக்கு மணி கட்டுவது யார்?

ஸ்ரீவைகுண்டம்:  ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் குப்பைகளை  கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சுகாதாரத்தை பேண வேண்டிய பேரூராட்சி நிர்வாகமே ஆற்றங்கரையில் குப்பைகளை கொட்டுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகா தலைநகரமாக திகழ்கிறது. இங்கு தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் ஆகிய முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளன. தாமிர
பரணி ஆறு வடகால், தென்கால் என வைகுண்டத்தில் தான் பிரிகிறது. இங்கு பிரசித்தி பெற்ற நவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதி
களில் தினமும்  சேகரிக்கப்படும் குப்பைகளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்த 2017ம்  ஆண்டு வரை தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கொட்டி வந்தனர். அப்போதைய  தாசில்தார் தாமஸ் அருள் பயஸ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி  செல்வன் என்ற ரங்கசாமி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில்  கொட்டப்பட்டு வந்த குப்பைகளை நத்தம் பகுதியில் உள்ள வளம் மீட்பு பூங்காவில்  கொட்ட நடவடிக்கை எடுத்தனர்.

இவர்களது பணியிட மாற்றத்திற்கு பிறகு பேரூராட்சி பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் மீண்டும் தாமிரபரணி ஆற்றங்கரையிலேயே கொட்டி வருகின்றனர். இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது,  மீறினால் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்ற எச்சரிக்கை பலகையை  வைத்த பேரூராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி வருவதற்கு சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், குப்பைகளை தினமும்  எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் பொது மக்களும் அருகில் உள்ள அரசு  மருத்துவமனை நோயாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே, குப்பைகளை  தாமிரபரணி ஆற்றங்கரையில் கொட்ட பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்பட்டு வந்த குப்பைகளில் தேங்கிய தண்ணீரில் ஜேசிபி கொண்டு சரிசெய்த பேரூராட்சி  பணியாளர்கள்  குப்பைகளை கொட்டக் கூடாது என வைக்கப் பட்டு இருந்த எச்சரிக்கை  பலகையையும் எடுத்துச் சென்றனர். கடந்த சில நாட்களாக பெய்து  வரும் கனமழையால் குப்பைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பிரேத  பரிசோதனை அறை சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்தது.

தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் அத்துமீறல் தொடர்கிறது. பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்க தூய்மை இந்தியா திட்டம், முழு சுகாதார திட்டம் உள்ளிட்ட எத்தனையோ திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் எதையும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. மாறாக வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்கரையிலேயே குப்பைகளை கொட்டி ஆற்றுக் கரையோரத்தை சீரழித்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்வதுடன் வற்றாத ஜீவநதியை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Kathi Tamiraparani ,river ,coast ,Srivai , For the perennial river of life, Kathi Tamiraparani, degenerate, Srivai, the bell for the cat
× RELATED கிளியாற்றில் மூழ்கி வாலிபர் பலி