நிவர் புயலுக்கு பின் மீண்டும் தொடங்கியது பேருந்து, மெட்ரோ, விமான சேவை; 12 மணி முதல் வெளியூர் செல்ல பேருந்துக்கள் இயக்கம்

சென்னை: இன்று நண்பகல் 12 மணி முதல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக கடந்த 24ம் தேதி நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை தொடங்க உள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 24.11.2020 மதியம் 1.00 மணி முதல் அரசுப் பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல் நேற்று இரவு 11.00 மணி அளவில் மரக்காணம் - புதுச்சேரி இடையில் கரையைக் கடந்து விட்டதால், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை:

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை மதியம் 12 மணி முதல் தொடங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் மெட்ரோ ரயில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விமானம் சேவை தொடக்கம்:

நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடந்த நிலையில் மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறக்க அனுமதி கிடைக்காததால் வானில் வட்டமிட்ட லண்டன் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. லண்டனில் வந்த விமானம் 8.30 மணிக்கு தரையிறங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 9.15-க்கு அனுமதி கிடைத்து தரையிறங்கியது. அதிகாரிகளின் ஆய்வுக்கு பின் ரன்வே திறக்கப்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி:

நிவர் புயல் கரையை கடந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று மாலை கிழக்கு கடற்கரை சாலை சீல் வைக்கப்பட்டது. புயல் கரையை கடந்ததையடுத்து தடுப்பு அகற்றப்பட்டு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து சேவை தொடக்கம்:

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 7 மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. நேற்று மதியம் 1 மணியுடன் ஆம்னி பேருந்து சேவைகள் மறு உத்தரவு வரும் வரை செயல்படாது என ஆம்னி உரிமையாளர்கள் சங்கள் தெரிவித்திருந்தது.

Related Stories: