×

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ம் தேதி வரை விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நிவர் புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் மாலை 6 மணி வரை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கர்க் தெரிவித்துள்ளார்.நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.  இதன்பின்னர் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது.  அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.

இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது. அடுத்த 3 மணிநேரத்தில் தீவிர புயல், புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.  எனினும், புயலை தொடர்ந்து பெய்து வரும் கனமழை, வீடுகள் மற்றும் கட்டிடங்களை சூழ்ந்து காணப்படும் வெள்ள நீர், மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 28ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pondicherry ,schools ,Karaikal , In Puducherry, 144 ban, order, extension
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...