நிவர் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.!!!

சென்னை: சென்னையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. தீவிர புயலாக மாறியுள்ள நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும். என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். நிவர் புயல் வலு குறைந்ததை அடுத்து படிப்படியாக தமிழகத்தில் மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, நிவர் புயல் கரையை கடந்தாலும், கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையில் பல குடியிருப்புகள் மழைநீரில் மூழ்கின.

சென்னையின் தாழ்வான பகுதிகளான கிழக்கு தாம்பரம், வேளச்சேரி, முடிச்சூர். திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, ஒவ்வொரு வீடும் தனித்தனி தீவாக காட்சியளித்தன. நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையினால் தமிழகத்தில் அதிகப்பட்சமாக சென்னை தாம்பரத்தில் 31.4 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விழுப்புரத்தில் 28 செ.மீட்டரும், சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் 27.8 செ. மீட்டரும், கடலூரில் 27.5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. நிவர் புயலின்போது பலத்த சூறைக்காற்று வீசியதால் சென்னை மாநகரில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

திருவல்லிக்கேணி, கே.கே.நகர், ஷெனாய் நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இடையூறாக சாலையில் சாய்ந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாப்பூர், ஆழ்வார்ப்பேட்டை, எம்ஜிஆர் நகர், வேளச்சேரி, புரசைவாக்கம், பெரம்பூர், மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Related Stories:

>