கால்பந்து ஜாம்பவான் மாரடோனா காலமானார்

பியூனோஏர்ஸ்: அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டீகோ மாரடோனா (வயது 60) கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, மாரடோனா வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மாரடோனா காலமானதாக அர்ஜென்டினா மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மாரடோனாவின் மறைவு உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரடோனா மறைவுக்கு முன்னணி கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி 1986ல் உலக கோப்பையை வென்று சாதித்தது. அத்தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதி போட்டியில் மாரடோனா தனது கையால் பந்தை தள்ளி கோல் அடித்தார். இதை நடுவர் கவனிக்க தவற அர்ஜென்டினா வெற்றி பெற்று, இறுதியில் அத்தொடரில் சாம்பியன் ஆனது. வெற்றிக்குப் பின், இது குறித்து பேசிய மாரடோனா அந்த கை ‘கடவுளின் கை’ என வர்ணித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இன்று வரை மறக்க முடியாத நினைவாக உள்ளது. மாரடோனா 4 முறை உலக கோப்பையில் (1982, 1986, 1990, 1994) விளையாடி உள்ளார். 2008 முதல் 2010 வரை அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

Related Stories: