×

சுரங்கப்பாதை கட்டுமான பணியில் மழைநீர் புகுந்ததால் தண்டவாளம் இறங்கியது: வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டையில் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் மழைநீர் புகுந்ததால் தண்டவாளம் இறங்கியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் - பென்சில் பேக்டரி இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.13 கோடி செலவில் தொடங்கப்பட்டது, பின்னர் பணி நிறுத்தப்பட்டது. அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணி தொடங்கப்பட்டது. கடந்த 11ம் தேதி சுரங்கப்பாதை பணி நடந்தபோது திடீரென சாலை 12 அடி தூரத்திற்கு  உள்ளே இறங்கியது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, நிவர் புயல் காரணமாக, கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணி நடக்கும் இடத்தில், மழைநீர் புகுந்து பணிகள் முற்றிலும் பாதித்தது.

ரயில்வே தண்டவாளமும் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த, 60க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில், தேங்கிய மழைநீரை அகற்றிய பின்பே, மீண்டும் பணி துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. மேலும், சம்பவ இடத்தை மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : tunnel construction ,Washermenpet , Railroad landing due to rainwater infiltration during tunnel construction
× RELATED வண்ணார்பேட்டையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்