×

‘நிவர்’ புயல் கரையை கடக்கும் முன்பே சென்னையில் முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட ஒரே நாளில் 4 பேர் பலி

சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும் முன்பே பெய்து வரும் கன மழையால் சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உட்பட 4 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். கோயம்பேடு மேட்டு குளத்தில் பீகார் மாநில கட்டிட தொழிலாளி ஷபாச் அலாம்(26) என்பவர்  வாடகை வீட்டில் தங்கி உள்ளார். சூறை காற்றால் அவரது வீட்டின் தகரத்தால் ஆன மேற்கூரை சிதலமடைந்தது. இதையடுத்து ேநற்று காலை 6.30 மணிக்கு சிதலமடைந்த இரும்பு தகரத்தை சரி செய்ய ஷபாச் அலாம் வீட்டின் மேற்கூரையில் ஏறியுள்ளார். அப்போது வீசிய காற்றால் நிலை தடுமாறிய அவர் பின்பக்கமாக மின்சார கம்பியில் தவறி விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அதேபோல், சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் 1 வது தெருவைச் சேர்ந்தவர் பாலன். எழும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருக்கு  கண்ணன் (75) என்ற வளர்ப்பு மகன் உள்ளார். பலத்த மழையால் கே.எம்.கார்டன் பகுதியில் உள்ள கண்ணன் வீடு மற்றும் தாழ்வான பகுதியில் 2 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி இருந்தது. அப்போது கண்ணன் தன் வீட்டு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்படியே அவர் கட்டிலில் இருந்து நீரில் விழுந்துள்ளார். அவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பார்த்தபோது ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டுசாலை எம்.ஜி.ஆர். நகர், பெருமாள்கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(50). இவர் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.  வீட்டில் ராஜா தனது அண்ணன் மருமகள் ரம்யா(24) உடன் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தனியார் அரிசி ஆலையின் சுற்று சுவர் இடிந்து ராஜா வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டில் இருந்த ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.  அதேபோல்,  திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மீது மரம் விழுந்ததில் அவர் இறந்தார். புயல் கரையை கடப்பதற்கு முன்பு சென்னையில் அடுத்தடுத்து நேற்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.


Tags : MLA ,border ,Nivar ,Chennai , Four people, including the son of a former MLA, were killed in a single day in Chennai before Hurricane Nivar crossed the border
× RELATED திமுகவிற்கு வாக்களிக்க மக்கள்...