`நிவர்’ புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக ராணுவம் வருகை: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: நிவர் புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீவிர நிவர் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக இடி மற்றும் மின்னலுடன் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்றும் அதிக கன மழை பெய்யக்கூடும். எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரை திரும்பியுள்ளனர்.

புயல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் குழுக்கள் கடலுர் - 6, நாகப்பட்டினம் (மயிலாடுதுறை) 1, விழுப்புரம் 3, செங்கல்பட்டு, நாகப்பட்டினம் (மயிலாடுதுறை), தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.  ராணுவ வீரர்களின் 8 குழுக்கள், 2 பாதுகாப்பு படகுகளுடன் நேற்று மாலை சென்னை வந்தனர். அதேபோன்று 6 குழுக்கள், ஒரு பாதுகாப்பு படகுடன் திருச்சி சென்றுள்ளனர்.  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று பிற்பகல் 12 மணி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதுபற்றிய அறிவிப்புகள் உடனுக்குடன் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் வருகிறது ஐஎன்எஸ் ஜோதி கப்பல்

தமிழ்நாடு புதுக்சேரி கடற்படை கமாண்டர் புனித் சந்த் கூறியதாவது : ஐஎன்எஸ் ஜோதி கப்பல் விசாகப்பட்டிணத்தில் இருந்து மீட்பு குழுக்கள் மற்றும் நிவாரண பொருட்களுடன் சென்னை வந்து கொண்டு உள்ளது. இந்த கப்பல் நள்ளிரவு சென்னை வந்தடையும். மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

Related Stories: