நிவர்’ புயலால் பாதிக்கும் வாய்ப்புள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: நிவர்’ புயலால் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கூறினார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று அதிகாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, அதன் முழு கொள்ளளவான 24 அடியை விரைவில் எட்டும் நிலை உள்ளது. தற்போது 22 அடியை எட்டி உள்ளதால், நேற்று காலை 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இது படிப்படியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயரும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12.50 மணிக்கு அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் விவரம் கேட்டறிந்தார்.

தற்போது ஏரிக்கு தண்ணீர் எவ்வளவு வருகிறது, எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:

நிவர் புயலை சமாளிக்க தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கன்ற மக்கள் அரசு முகாம்களில் தங்க வைத்துக்கொண்டிருக்கிறோம். சென்னை மாநகரத்தில் 200 வார்டுகள் இருக்கின்றன. அந்த 200 வார்டுகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை 400 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகரத்தை பொறுத்தவரை, கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகரத்தில் சுமார் 30 தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருக்கின்றது.  அந்த தண்ணீரை அகற்றுவதற்காக, சென்னை மாநகராட்சி, ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி, தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.

அதேபோல டெல்டா மாவட்டங்கள், புயலால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என 13 மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது, கனமழை பொழியுமென்று இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக  தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்றும் விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே வேளாண் துறை செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பொதுப்பணி துறை செயலாளர் மணிவாசன், காஞ்சிபுரம்  கலெக்டர் மகேஸ்வரி உடன் இருந்தனர்.

அடையாற்றில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் செல்கிறது

முதல்வர் எடப்பாடி நிருபர்களிடம் மேலும் கூறியதாவது, ‘‘செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டத்தின் உயரம் 24 அடி. தற்போது 21.5 அடி நீர் நிரம்பி இருக்கிறது. ஏரிக்கு 4000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 12 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அத்துடன் ஆதனூர் ஏரியிலிருந்து 2000 கனஅடி நீர் அடையாற்றின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்னும் இரண்டு, மூன்று மணி நேரத்திற்குள் அங்கு வருகின்ற நீர் முழுவதும் திறக்கப்படும். விநாடிக்கு சுமார் 6,000 கனஅடி நீர் அடையாற்றின் வழியாக செல்கிறது. அடையாற்றில் சுமார் 60,000 கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய அளவிற்கு ஆற்றின் அகலம் இருக்கிறது. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.

2015ம் ஆண்டை மறக்க முடியுமா?

2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்அறிவிப்பு இன்றி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. பலரும் உயிரிழந்தனர். அதுபோன்ற நிலைமை இந்த ஆண்டு வந்துவிடுமோ? என்று சென்னை மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

Related Stories: