வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்க வேண்டும்: இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக வேண்டுகோள்

சென்னை: வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு பொருட்களை அதிமுக தொண்டர்கள் உடனடியாக  வழங்க வேண்டும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் பெருமழை பெய்து வருகிறது. வலுவான புயல் தமிழகத்தை தாக்க இருக்கிறது. இந்த சூழலில், தமிழக மக்களின் தேவைகளை அறிந்து, உடனுக்குடன் உதவிட அரசு போர்க்கால அடிப்படையில் உழைத்துக் கொண்டிருக்கிறது.  நிவாரண பணிகளிலும், மறுவாழ்வு பணிகளிலும் அரசுக்கு துணை நின்று, மக்களின் துயர் துடைக்கும் தன்னார்வ பணிகளை அதிமுக தொண்டர்கள் முழுமூச்சோடு மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டசெயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் உடனடியாக களப்பணியாற்றிட கட்டளையிடுகிறோம்.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு பொருட்களை உடனடியாக வழங்க என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் விரைந்து செய்யுங்கள். வெள்ளத்தில் ஆடைகளை இழந்தோர், அடிப்படை தேவைகளை இழந்தோர் அனைவருக்கும் விரைந்து உதவுங்கள். மழையால் தாழ்வான பகுதிகளிலும், கரையோர பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற மின்மோட்டார்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஏற்பாடுகளைச் செய்யுங்கள். புயல் கடந்து, மழை ஓய்ந்து நிலைமை சரியாக தொடங்கும் வரையில் செய்யப்பட வேண்டி மறுவாழ்வுப் பணிகளிலும் அக்கறை செலுத்துங்கள்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: