மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் திமுகவினர் களம் இறங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அழைப்பு

சென்னை:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  ‘நிவர்’ புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மக்களின் வாழ்விடங்கள் நீரால் சூழ்ந்துள்ளன. சென்னை மாநகரைப் பொறுத்தவரை தாழ்வான மற்றும் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. கடலோர மாவட்ட மக்களின் நிலையும் இதுதான்.  சென்னையில், திரு.வி.க. நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகள் உட்பட, பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தேன். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினேன்.

 செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு காரணமாக, அதனைத் திறந்துவிடப் பொதுப் பணித்துறை முடிவெடுத்து திறந்து விட்டிருப்பதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களை 2015ம் ஆண்டு வெள்ளப் பேரிடர் போன்ற சூழல் மிரட்டி வருகிறது. மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைககளில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

எப்போதும் மக்கள் பணியாற்றும் பேரியக்கமான திமுக நிர்வாகிகளையும், மக்களுக்குத் தேவையான உதவிகளையும், பேரிடர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்குத் தேவையான ஒத்துழைப்புகளையும் வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இப்போது முதலில் நமக்குத் தேவை மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து,  அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது என்பதை மனதில் கொண்டு தீவிரப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

ஏறத்தாழ 9 மாதங்களாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தப் புயல்  மழைச் சூழல் அந்த நோய்த் தொற்றின் இரண்டாம் அலைக்குக் காரணமாகிவிடக்கூடாது.  தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வுத்துறையும் உரிய மருத்துவ முறைகளைக் கையாண்டு, மக்களைக் காத்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகமது பட்டேல் மறைவுக்கு இரங்கல்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் தெரிவித்துள்ளதாவது: காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான அகமது பட்டேல் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: