பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக கடத்தப்பட்ட 500 கோடி ஹெராயின், செயற்கை போதை பொருள் பறிமுதல்

* இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது; 5 துப்பாக்கிகள் சிக்கியது

* தூத்துக்குடி அருகே கடலோர பாதுகாப்பு படை அதிரடி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.500 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் செயற்கை போதை பொருட்களை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.  பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் தங்களது வருவாய்க்காக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி வருகின்றன.  இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் இந்தியாவின் தென்பகுதியில் உள்ள சர்வதேச கடல் எல்லையை பயன்படுத்தி நடந்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து  நாட்டின் அனைத்து பாதுகாப்பு துறைகளும் உஷார்படுத்தப்பட்டது. கடந்த 17ம் தேதியிலிருந்து இந்திய மற்றும் சர்வதேச கடல் எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

 இதனிடையே இந்திய கடல் எல்லை பகுதிகளுக்குள் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள செயற்கைக் கோள் கட்டுப்பாட்டு தலைமையகத்திற்கு ‘சிக்னல்கள்’ கிடைத்துள்ளன. இதையடுத்து இந்திய தென்பகுதி கடற்படை மற்றும் தூத்துக்குடி கடலோர காவல்படை உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.  இதில் நேற்று முன்தினம் இரவு  தூத்துக்குடியில் இருந்து தெற்கே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு சிறிய படகு நுழைந்தது தெரியவந்தது. ‘சேனையா துவா’ என்ற இலங்கையைச் சேர்ந்த இப்படகை துப்பாக்கி முனையில் கடலோர காவல்படை கப்பலான வைபவ்வில் இருந்த கடலோர காவல்படையினர் சுற்றி வளைத்தனர். கடலோர காவல் படையினர் அந்தப் படகை சோதனையிட்டதில் அதில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். அப்படகில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரி பெய்டு சேட்டிலைட் போன் இருந்துள்ளது. இது துபாயில் தயாரான துராயா என்ற வகையைச் சேர்ந்தது. இதன் மதிப்பு ரூ.2.50 லட்சம் ஆகும்.

மேலும் அப்படகின் கீழ்ப்பகுதியில் காலியான தனி பெட்ரோல் டேங்கை கடலோர காவல் படையினர் திறந்து பார்த்தபோது  20 சிறிய பெட்டிகளில் செயற்கை போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதன் உள்ளே 99 பாக்கெட்டுகளில் ஹெராயின் என்ற  போதைப் பொருள் இருந்தது. இவ்வாறு சுமார் 100 கிலோ எடையிலான இந்த போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.500 கோடி இருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் படகை தீவிரமாக சோதனையிட்ட கடலோர காவல் படையினர் படகிலிருந்து 5 கைத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு இலங்கையில் நிகம்புவில் உள்ள அலென்சு குட்டிகே சின்கா தீப்தா சானி பெர்னாண்டோ என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து படகில் இருந்த 6 பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்து, தூத்துக்குடி தலைமையகத்துக்கு அழைத்து வருகின்றனர். நேற்று இரவுக்குள் அவர்கள் தூத்துக்குடி வந்துவிடுவர் என்றும் அவர்கள் விசாரணைக்காக சென்னையில் உள்ள கடலோர காவல் படையின் தலைமையகத்திற்கு இன்று அழைத்துச் செல்லப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களிடம்  மத்திய, மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவினர், ரா அமைப்பினர் மற்றும் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சர்வதேச  கடத்தல் கும்பல்

முதற்கட்டமாக நடந்துள்ள விசாரணையில் இந்த போதை பொருட்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சர்வதேச கடத்தல் கும்பல்களுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்றும் அரபிக்கடல் வழியாக பயணித்த கடத்தல் கும்பல்கள் கடற் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கிகள் வைத்திருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தீவிரவாத கும்பல் துணிகரம்

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் இன்டர்போல் கண்களில் மண்ணை தூவிவிட்டு சர்வதேச கடத்தல் கும்பல் மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருட்கள் வியாபாரம் செய்து தங்களது வருவாயை பெருக்கிக் கொள்ள துணிந்து அதற்கு வசதியாக இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சர்வதேச கடல் பாதையை தேர்வு செய்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

பாதுகாப்புக்கு சவால்

பாகிஸ்தான் துறைமுகமான கராச்சியில் இருந்து அரபிக்கடல், இந்திய பெருங்கடல் என பயணித்து வந்துள்ள இந்த போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இந்திய பாதுகாப்பு துறையின் கண்களில் சிக்காமலேயே  இரு பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கடல்மைல் தொலைவு வந்து வங்காள விரிகுடாவில் சிக்கியுள்ளது. இது இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கும் சவால்விடும் விதத்தில் அமைந்துள்ளதாக சமூக நோக்கர்கள் கருதுகின்றனர்.

உளவுத்துறை எச்சரிக்கை

 கடந்த சில நாட்களுக்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு  உளவு அமைப்புகள் இந்த கடத்தல் குறித்து எச்சரித்துள்ளன. அதன் பின்னரே இந்த வேட்டை இந்தியாவின் முக்கிய 3 கடல் பகுதிகளிலும் நடந்து வந்துள்ளது. பாகிஸ்தான் துறைமுகமான கராச்சியில் இருந்து திருட்டுத்தனமாக புறப்பட்டு வந்த தோவ் எனப்படும் சிறிய பாய் மரபடகு மூலம் இந்த போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு அரபிக்கடலில் இலங்கையை சேர்ந்த சேனையா துவாவுக்கு மாற்றப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: