×

வேளாண் பல்கலை. ஆன்லைன் கலந்தாய்வு திட்டமிட்டபடி இன்று நடக்கும்: துணை வேந்தர் தகவல்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பாண்டிற்கு இளங்கலை மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்று முதல் 28ம் தேதி வரை நடப்பதாக இருந்தது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூன்று நாட்களில் இருந்து 6 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் வரும் டிசம்பர் 1-ம் தேதி வரை ஆறு நாட்கள் கலந்தாய்வு நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 600 மாணவர்கள் அழைக்கப்படுவர். மேலும், டிசம்பர் 15ம் தேதி முதல் நகர்வு மற்றும் இரண்டாம் கட்ட கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு இணையவழியில் நடக்கும். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு டிசம்பர் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.

இதில், தற்காலிக இடஒதுக்கீட்டிற்கான கடிதம் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும், டிசம்பர் 29ம் தேதி வேளாண் தொழில்நிறுவனங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடும், 30ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்படும். பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கலந்தாய்வு தேதிகளில் மாற்றங்கள் இல்லை எனவும், திட்டமிட்டபடி இன்று ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “கவுன்சலிங் ஆன்லைனில்தான் நடக்கிறது. மேலும், 3 நாட்கள் நடக்கவிருந்த கவுன்சலிங் தற்போது புயல் காரணமாக 6 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, கலந்தாய்வு திட்டமிட்டப்படி நாளை (இன்று) நடக்கும்” என்றார்.


Tags : University of Agriculture ,consultation ,Deputy , University of Agriculture. The online consultation will take place today as planned: Deputy Vander Info
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு