×

தொலைதூர கல்வித்திட்டத்தில் பிஇ படித்தால் பதவி உயர்வு கூடாது: ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை:  தொலைதூர கல்வியில் பிஇ படித்தவர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தில் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தக் கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மேலமாசி வீதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகள் உதவி பொறியாளர்களாகவும், டிப்ளமோ முடித்தவர்கள் இளநிலை பொறியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். ஒரே தகுதி நிலையிலுள்ள இரு பணியிடத்திலும் உள்ளவர்கள் 3:1 என்ற விகிதத்தில் உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இந்த பணிக்கு நேரடி கல்வி முறையில் பட்டம் பெற்றவர்களையே ஏஐசிடிஇ அங்கீகரித்துள்ளது. ஆனால், தொலைதூர கல்வி திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றவர்கள் உதவி பொறியாளர் பிரிவில் பதவி உயர்வு பெறுகின்றனர். இதனால், நேரடியாக பட்டம் பெற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது.

வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்படுகிறது. தரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணியை உரிய தகுதி பெறாதவர்கள் மூலம் மேற்ெகாள்வது சரியாக இருக்காது. எனவே, வீட்டுவசதி வாரியத்தில் பொறியாளர்களாக பணியாற்றுபவர்கள் ஏஐசிடிஇ நிர்ணயித்த முறையான தகுதியை பெற்றுள்ளார்களா என்பதை பரிசீலிக்கவும், பதவி உயர்வுக்கான இந்த நடைமுறையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் மாசிலாமணி ஆஜராகி, ‘‘பெரியளவிலான கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளில் ஈடுபடுவோர் அதற்கென ஏஐசிடிஇ நிர்ணயித்த தகுதியை பெற்றிருக்க வேண்டியது அவசியம்’’ என்றார். இதையடுத்து, மனுவிற்கு வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாட்டு துறை முதன்மை செயலர், வீட்டு வசதிவாரிய மேலாண் இயக்குநர் மற்றும் ெசயலர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.


Tags : Education should not be promoted at the remote PE study: High Court Case
× RELATED விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள்...