நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் அநாகரீகமாக பேசக் கூடாது: எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

கெவடியா: நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ உறுப்பினர்கள் அநாகரீகமாக பேசுவதும், நடந்து கொள்வதும் அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும், என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், கெவடியாவில் 80வது சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்ற விதிகளை பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது ஜனநாயக அமைப்பு, அதன் பிரதிநிதிகளுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது. மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ தகாத வார்த்தைகளை பேசினாலோ அல்லது அநாகரீகமாக நடந்து கொண்டாலோ மிகவும் புண்படுகின்றனர்.

நாடாளுமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை, விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அவையில் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சுமுகமான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதை சபாநாயகர்கள் உறுதிப்படுத்த வேண்டும். சமூகத்தில் பின்தங்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தின் இறுதி குறிக்கோளான மக்கள் நலனை உறுதிப்படுத்த முடியும். இந்த இலக்கினை அடைய ஆட்சி, அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்று பிரிவுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்புதான்

இந்த மாநாட்டில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘‘மக்களின் பிரதிநிதி என்கிற முறையில் நாம் எப்போதும் மக்களின் நலனுக்காக உழைக்க வேண்டும். அரசியலமைப்பின் மதிப்புக்கேற்ப பணியாற்ற வேண்டும். நாடாளுமன்றம், நீதிமன்றங்கள் போன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானதுதான். ஆனால், அவற்றுக்கு எல்லாம் விதிமுறைகளில் மாற்றம் செய்வது, அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும். ஆட்சி, அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறைகள் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இருப்பது மிகவும் முக்கியம். இந்த மூன்று முக்கிய விஷயங்களும் பொதுமக்களுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: