×

தாமதமாகும் ஆஸ்திரேலிய ஓபன்: விளையாட்டு அமைச்சர் தகவல்

மெல்போர்ன்: ‘ஆஸ்திரேலிய  ஓபன்  திட்டமிட்டதை விட மேலும் சில நாட்கள் தாமதமாக தொடங்கும்’ என்று  விக்டோரியா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா  பரவல் காரணமாக  பாரம்பரியமிக்க கிராண்ட் ஸ்லாம் போட்டியான விம்பிள்டன்   ரத்து  செய்யப்பட்டது. தள்ளி வைக்கப்பட்ட பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் கிராண்ட்  ஸ்லாம் ேபாட்டிகள்  ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய அரங்குகளில் நடந்தன. இதே  பாணியில் ஏடிபி பைனல்ஸ்/டூர் டென்னிஸ் போட்டிகளும் நடத்தப் படுகின்றன. ஆனால்  இந்தாண்டு கொரோனாவிடம் இருந்து தப்பித்தது, கிராண்ட் ஸ்லாம்  போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மட்டும்தான். காரணம் அந்தப் ேபாட்டி  கொரோனா பீதி,  ஊரடங்கு ஆகியவை தொடங்குவதற்கு முன்பு ஜனவரியில் நடந்து விட்டதுதான். ஆஸி  ஓபன் வழக்கமாக ஜனவரி மாதத்தின் கடைசி 2 வாரங்களில் நடக்கும். அப்போது  தான்  அங்கு  கோடைக்கால, பள்ளி விடுமுறை நாட்கள். அடுத்த ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டி  2021ம் ஆண்டு ஜனவரி 18 முதல் ஜன.31ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறும்  என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மெல்போர்ன் நகர்  உள்ள விக்டோரியா மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் மார்ட்டின்  பாக்குலா நேற்று , ‘டென்னிஸ் சங்க நிர்வாகிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் ஆஸி ஓபன் நடத்துவது  தொடர்பாக பேச்சு வார்த்தை நடக்கிறது. விரைவில் ஒரு முடிவு  எட்டப்படும்  சூழல் உள்ளது. வரும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியாக ஆஸி.ஓபன்  நடக்கும். அதே நேரத்தில்  போட்டி ஜன.18ம் தேதிக்கு பதில் மேலும் சில  நாட்கள் அல்லது ஒரு வாரம் கூட தாமதமாக தொடங்க வாய்ப்புகள் அதிகம்’ என்று  கூறியுள்ளார்.  இந்த பேச்சு வார்த்தைக்கு முக்கிய காரணம் விக்டோரிய  மாநிலத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக இருப்பதுதான். அதனால்  போட்டியின் போது  மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, இரண்டு  தரப்பிலும் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. அதனால்  பேச்சு வார்த்தையில்  இழுபறி நீடிக்கிறது.


Tags : Sports Minister ,Australian Open , Delayed Australian Open: Sports Minister informed
× RELATED ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவில்லை: ரோஜர் பெடரர் பேட்டி