×

நிவர் புயல் அச்சத்தால் வெறிச்சோடிய டெல்டா மாவட்டங்கள்: கடல் சீற்றத்தால் மீனவர்கள் முடக்கம்

நாகை: நிவர் புயல் எச்சரிக்கையால் டெல்டா மாவட்டங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடல் சீற்றத்தால் மீனவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். 8000பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கஜா புயலின் போது ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத டெல்டா பகுதி மக்கள் நிவர் புயல் எச்சரிக்கையால் அரண்டு போய்விட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நாகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், அச்சத்தில் இருந்த நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் அனைவரும் வீடுகளில் முடங்கினர்.  மழை மற்றும் காற்று வீசுவதால் மின் விநியோம் அவ்வப்பொழுது நிறுத்தப்பட்டது. புயல் எச்சரிக்கையின் காரணமாக நேற்று மதியம் முதல் நாகையில் இருந்து செல்லும் அனைத்து பஸ்கள் நிறுத்தப்பட்டது. பொது மக்களின் நடமாட்டம் குறைந்தது.

இதனால் எந்த நேரமும் நெரிசல் நிறைந்த நாகை பப்ளிக்ஆபீஸ் சாலை, நீல தெற்கு வீதி, கடைவீதி உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேதாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளதால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் , வானவன் மகாதேவி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. புயல் பாதுகாப்பு மையங்கள் நகராட்சி சார்பில் 11 முகாம்களும், ஊராட்சி பகுதியில் 150 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வேதாரண்யத்தில் 5முகாம்கள் திறக்கப்பட்டு 8000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் உள்ளவர்களுக்கு உணவு, குடிதண்ணீர், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

திருாவரூர், தஞ்சை, பெரம்பலூர், புதுக்கோட்டை திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று காலை முதல் வானம் இருண்டு காணப்பட்டது. குளிர்  காற்று வீசியதோடு தொடர்ந்து தூறல் மழை பெய்தது. கடலில் சூறைகாற்று வீசியது.  கடலில் ராட்சத அலைகள் எழும்பியதால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். புயல் எச்சரிக்கையால் பல இடங்களில் மின்  விநியோகம் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டன. வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்ததால் எந்த நேரமும் நெரிசல்  நிறைந்த கடைவீதிகள், பஸ்நிலையங்கள், முக்கிய இடங்கள் வெறிச்சோடி  காணப்பட்டது.

110 மீனவர்கள் கரை திரும்பினர்
நாகையில் இருந்து 11 விசைப்படகில் மீன் பிடிக்க ஆழ்கடல் சென்ற மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை கரை திரும்பவில்லை. காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கடல் சீற்றம் அதிகரித்தது. இதனால் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் உறவினர்கள் அவர்களை மீட்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில் நேற்று காலை 11 விசைப்படகில் சென்ற 110 மீனவர்களும் பத்திரமாக நாகை வந்தடைந்தனர்.

Tags : districts ,Delta ,hurricane Nivar ,Fishermen , Delta districts deserted by fear of hurricane: Fishermen freeze due to sea rage
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு