×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மறைவு: ஜனாதிபதி உட்பட தலைவர்கள் இரங்கல்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகருமான அகமது படேல், கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், மாநிலங்களை உறுப்பினர் அகமது படேல் (71). காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த ஒன்றரை மாதங்களாக பரிதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் உள்ளுறுப்புக்கள் செயலிழப்பால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அகமது படேல் உயிரிழந்ததாக அவரது மகன் பைசல் படேல் தெரிவித்தார்.

கடந்த 1977ம் ஆண்டு குஜராத் மாநிலம், பரூச் மக்களவை தொகுதியில், பாஜ.வுக்கு கிடைத்த ஆதரவு அலையிலும் அகமது படடேல் முதல் முறையாக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து குஜராத் இளைஞர் காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார். 1986ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக உயர்ந்தார். 1988ல் ஜவகர் பவன் அறக்கட்டளையின் செயலாளர் ஆனார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இவர் சிறந்த நண்பராக விளங்கினார். அகமது படேலின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா  காந்தி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘அகமது படேலின் மறைவு, துயரத்தை  அளிக்கிறது.

பொதுவாழ்வில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், இந்த சமூகத்துக்கு  ஆற்றிய சேவை, கூர்மையான அறிவு, காங்கிரஸ் கட்சியை அவர் பலப்படுத்திய விதம்  போன்றவை எப்போதுமே நினைவு கூரத்தக்கவை,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘ஈடுசெய்ய முடியாத  தோழரை இழந்து விட்டேன். மிகவும் நம்பிக்கைக்குரியவர், சிறந்த  நண்பர். அவரை இழந்து விடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்,’ என கூறியுள்ளார்.

பெற்ேறார் சமாதி அருகே அடக்கம் செய்ய விருப்பம்
குஜராத் மாநிலம், பரூச் மாவட்டத்தில் உள்ள பிரமான் கிராமம்தான், அகமது படேலின்  சொந்த ஊர். இங்குள்ள தனது மூதாதையர்களின் வீட்டுக்கு அருகே உள்ள தனது  பெற்றோரின் சமாதி அருகே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்று அகமது  படேல் விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி, அவருடைய உடல் இங்கு கொண்டு  வரப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.


Tags : Ahmed Patel ,Congress ,president ,Leaders , Ahmed Patel, Congress senior leader, dies
× RELATED புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா