×

பீகாரில் நிதிஷ் ஆட்சியை கவிழ்க்க சதி பாஜ கூட்டணி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க லாலு பேரம்: பாஜ மூத்த தலைவர் சுஷில் மோடி திடீர் குற்றச்சாட்டு

பாட்னா: ‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க,  ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேச முயற்சிக்கிறார்,’ என இம்மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக மீண்டும் உருவெடுத்தது. ஆனால், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 19 இடங்களை மட்டுமே வென்றதால், ஆட்சியை கைப்பற்ற தேவையான 122 இடங்களை பெற முடியாமல் போனது. அதே நேரம், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில், பாஜ மட்டும் 74 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஜேடியூ 41 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இருப்பினும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதத்தில் பாஜ தலைமை, நிதிஷ் குமாரை மீண்டும் முதல்வராக்கியது.  இந்நிலையில், சட்டப்பேரவை நெறிமுறைகள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் குமார் மோடி, நிதிஷ் குமார் அரசை கவிழ்க்க, தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ.க்களிடம் லாலு பிரசாத் குதிரை பேரம் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், லாலு பிரசாத் யாதவ், ராஞ்சியில் இருந்து தொலைபேசி (8051216302) மூலம் அமைச்சர் பதவி தருவதாக தேசிய ஜனநாயக எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசியுள்ளார். இந்த எண்ணில் அழைத்த போது, லாலு தான் போனை எடுத்தார். அப்போது அவரிடம், `சிறையில் இருந்து கொண்டு இது போன்ற கேடு கெட்ட தந்திர வேலைகளை செய்யாதீர்கள்.

இதில், நீங்கள் வெற்றி பெற முடியாது,’’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ டேப் வெளியாகி இருக்கிறது. இதனால், பீகாரில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், நீதிமன்றங்கள் அளித்த தண்டனையின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், உடல்நிலை சரியில்லை என கூறிவிட்டு, ஆடம்பரமான பங்களாவில் அவர் சொகுசாக தங்கி இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு ஜாமீனுக்கு சிபிஐ எதிர்ப்பு
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, நான்கு கால்நடை தீவன ஊழல் வழக்கில், 14 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில், தும்கா நிதி முறைகேடு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லாலு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கின் தண்டனை காலத்தில் பாதியை அவர் நீதிமன்ற காவலில் கழித்து விட்டதாக வாதாடினர். அப்போது குறுக்கிட்ட சிபிஐ, `இந்த வழக்கு தொடர்பாக ஒருநாள் கூட அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படவில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது,’’ என எதிர்ப்பு தெரிவித்தது. கால்நடை தீவன ஊழல் வழக்குகளில், மூன்றில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அத்துடன் தொடர்புடைய தும்கா நிதி முறைகேட்டில் லாலுவுக்கு ஜாமீன் கிடைத்தால், அவர் சிறையில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக சுற்றி திரிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : Sushil Modi ,BJP ,Nitish Kumar ,alliance MLAs ,Bihar , BJP senior leader Sushil Modi has been accused of plotting to overthrow the Nitish Kumar regime in Bihar to buy BJP alliance MLAs.
× RELATED திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதியோர் அனைவருக்கும் மீண்டும் உதவித்தொகை