×

புதுச்சேரி மற்றும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வடமாவட்டங்களை நிவர் அதி தீவிர புயல் தாக்கியது: சூறாவளி காற்றால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன: வீடுகளின் கூரை பறந்தது

* கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது  
* நாள் முழுவதும் கொட்டிய மழையால் மிதக்கிறது தலைநகர்
* விளை நிலங்கள் நாசம்
* முக்கிய சாலைகளுக்கு சீல், விமான நிலையம் மூடல்

சென்னை: நிவர் புயல் நேற்று மாலை மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறி நேற்று இரவு முதல் விடிய விடிய கரையைக் கடந்தது. இதனால், வட மாவட்டங்களில், இடி, மின்னலுடன்  மிக அதிக கனத்த மழை கொட்டியது. பலத்த சூறைக் காற்று வீசி பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இந்த புயல், இன்று மாலை தான் ஆந்திர எல்லைக்குள் நகர்ந்து செல்லும். இதனால் சேதம் அதிகம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு பிறகு 6 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் தீவிரம் அடைந்து தற்போது நிவர் புயலாக மாறியுள்ளது. நேற்று மதியம் வரை அந்த புயல் கடலூருக்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் 200 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே 300 கிமீ தொலைவிலும் சென்னைக்கு  தென் கிழக்கே 350 கிமீ தொலைவிலும் மையம் கொண்டு இருந்தது.   

நேற்றைய கணிப்பின் படி அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் தீவிரம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாலை  நிவர் புயல் மேலும் தீவிரம் அடைந்து சூப்பர் புயலாக(அதி தீவிரமாக) மாறியது.  இந்த வானிலை நிகழ்வின் காரணமாக நேற்று முதல் தமிழக கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. நேற்றை பகல் நிலவரப்படி புயல் கடலோரப்பகுதியில் நிலை கொண்டதால், கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. மாமல்லபுரம் உள்ளிட்ட சில இடங்களில் கடல் நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதையடுத்து, நேற்று இரவு 8 மணி அளவில் நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கத் தொடங்கியது. அந்தப் புயல் நள்ளிரவில் மேலும் தீவிரம் அடைந்து வேகமெடுத்தது.

இந்த புயல் சூப்பர் புயலாக மாறினாலும், அதன் நகரும் தன்மை குறைவாக இருப்பதால் உடனடியாக இந்த புயல் கரையை கடந்து விடவில்லை. அதனால் இரவு முழுவதும் மெதுவாகவே நகர்ந்தது. விடிய விடிய மெதுவாக நகர்ந்து கரையைக் கடக்கத் தொடங்கியது. இதில் புயல் வடமாவட்டங்களான விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், சென்னை மாவட்டங்களை கடந்து இன்று மாலை தான் ஆந்திர மாநில எல்லைக்குள் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு அது மகாராஷ்டிரா வரை சென்று சாதாரண காற்றழுத்தமாக மாறி வலுவிழக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் தமிழகத்தை கடந்து சென்றாலும் 6 மணி நேரம் வரை மழை பாதிப்பு இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது.  தமிழக எல்லையை விட்டு புயல் கடந்து செல்லும் போது, பலத்த மழை, காற்று விடியவிடிய நீடித்தது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புயல் வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியதும், காரைக்கால், புதுச்சேரி, மரக்காணம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 160 மிமீ வரை மழை கொட்டித் தீர்த்தது. இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் நேற்று பகல் முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 2018ம் ஆண்டு வந்த கஜா புயலைவிட இந்த நிவர் புயல் அதிக சக்தி வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளதால் சேதம் அதிகமாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நேற்று காலையில் இருந்தே மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியது. .இந்த நிவர் புயல் காரணமாக கோடியக்கரை முதல் சென்னை வரை கடலோரப் பகுதியில் கடலில் கடலில் சீற்றம் அதிகமாக இருந்தது. இன்று இரவு வரை  கடலில் கொந்தளிப்பு மற்றும் சீற்றம் காணப்படும். அதனால் கடல் அலைகள் 3மீட்டர் முதல் 6 மீட்டர் வரை எழும்பியது. இதனால் பல இடங்களில் கடல் நீர் புகுந்தது.  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 145 கிமீ வேகம் முதல் படிப்படியாக அதிகரித்து 200 கிமீ வேகம் வரை வீசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புயல் மாமல்லபுரம் அருகே நெருங்கிவரும் போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மழையும் பெய்து வருகிறது.

இதையடுத்து, பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் நிவர் புயல் கரையைக் கடந்த போது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காரைக்கால், புதுச்சேரியிலும் குடிசை வீடுகளின் கூறைகள், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஷெட்களின் மேற்கூறைகள், தகடுகள், ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சில இடங்களில்  பழைய வீடுகளும் இடிந்து விழுந்தன.  மின்சாரக் கம்பங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. மரங்களும் சாலைகளில் சாய்ந்தன. இதனால் போக்குவரத்துக்கு வழியில்லாமல் சாலைகள் அடைபட்டன.  பழைய சாலைகள், மண் சாலைகள், பலமிழந்துள்ள பாலங்களும் சில இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டன.

விளை நிலத்தில் உள்ள பயிர்கள், தென்னை மரங்கள், மற்ற மரங்கள், பனை மரங்கள், காற்றின் வேகத்தில் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் வட மாவட்டங்களில் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புயல் பாதிப்பு அதிகம் ஏற்படும் இடங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் அரசு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பிலும், வருவாய்த்துறை சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. புயலில் இருந்து மக்களை மீட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாழ்வானப் பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைக்குப் பிறகுதான் சேதம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.



Tags : districts ,Chengalpattu ,Chennai ,houses ,Pondicherry , Pondicherry and Chennai, Chengalpattu and other northern districts were hit hard by the cyclone.
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து...