டிச. 1ல் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; பிரசாரத்தில் மோடி, அமித் ஷா பங்கேற்பு?... எதிர்கட்சியாக பாஜ உருவெடுத்ததால் ஆளுங்கட்சி பீதி

ஐதராபாத்: வரும் டிச. 1ல் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சியாக பாஜ உருவெடுத்ததால் ஆளுங்கட்சி இலவச தேர்தல் வாக்குறுதியை அளித்து வருகிறது. தெலங்கானா மாநிலம் கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வரும் டிச. 1ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), பாஜக இடையில்தான் கடும்போட்டி நிலவுகிறது. ஐதராபாத்தில் முஸ்லிம் வாக்குகளும் அதிகம் உள்ளதால், ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் களத்தில் உள்ளது.

போட்டி கடுமையான நிலையில், டிஆர்எஸ் கட்சி சார்பில் முதல்வர் சந்திரசேகர ராவ், இலவச, சலுகை வாக்குறுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், ‘வரும் டிசம்பர் முதல் ஐதராபாத்தில் 20 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் உபயோகிக்கும் வீடுகளுக்கு தண்ணீர் வரி ரத்து செய்யப்படும். மூசி நதியை கோதாவரி நதியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் சலவைத் தொழிலாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கொரோனா காலத்தில் வாகன வரி ரத்து செய்யப்படும். ரூ.10 கோடிக்குள் எடுக்கப்படும் திரைப்படத்துக்கு மாநிலஜிஎஸ்டி வரி திரும்ப வழங்கப்படும்’ போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக மூத்த தலைவர்கள் ஐதராபாத்துக்கு பிரசாரம் செய்ய வரவுள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். இதுகுறித்து எம்.எல்.சி மற்றும் நகர பிரிவு முன்னாள் தலைவரான ராம்சந்தர் ராவ் கூறுகையில், ‘தேசிய தலைவர்களின் பிரசார அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் அவர்களின் வருகையை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்’ என்றார்.

இதற்கிடையே கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் ஐதராபாத் வருவார்கள் என்று தகவல்கள் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: