அதிமுக பிரமுகரின் தலையீடு? போலீஸ் ஸ்டேஷனில் பெண்களுக்கு டார்ச்சர்: வேடசந்தூரில் பரபரப்பு

வேடசந்தூர்: அதிமுக பிரமுகரின் தலையீட்டால், வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷனில், 2 பெண்களை போலீசார் டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் 2 பேரும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள சேனங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் செல்வி (40), மகாலட்சுமி (56). நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (22), இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இது தொடர்பாக வேடசந்தூர் போலீசில் புவனேஸ்வரி புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் நேற்று அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக வீடு புகுந்து செல்வி மற்றும் மகாலட்சுமியை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல், சட்ட விரோதமாக மாலை 6 மணி வரை போலீஸ் ஸ்டேஷனிலேயே வைத்திருந்தனர். இதையறிந்த அவர்களது உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்டனர். அப்போது, நிலக்கோட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர்களிடம் போலீசார் கூறியுள்ளனர். ஆனால் பெண்கள் இருவருக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உறவினர்கள் கூறுகையில், ‘‘அதிகாலை 4 மணிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்களை மாலை 6 மணி வரை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், ேபாலீஸ் ஸ்டேஷனில் வைத்து டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. புகார் கொடுத்த புவனேஸ்வரி அதிமுக பிரமுகர் ஒருவரின் உறவினர். அந்த அதிமுக பிரமுகரின் தலையீட்டால்தான் போலீஸ் ஸ்டேஷனில் பெண்களை டார்ச்சர் செய்துள்ளனர். இது குறித்து உயரதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: