×

டெல்டாவில் தயார் நிலையில் முகாம்கள், மணல்மூட்டைகள்

நிவர் புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. நாகை மாவட்டத்தில் 9பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் 50 ஆயிரத்து 200 மணல் மூட்டைகள், 21 ஆயிரத்து 290 சவுக்கு மரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மின்சாரதுறை சார்பில் 12 ஆயிரத்து 750 மின் கம்பங்கள், 6மின்மாற்றிகள், 90 கிலோ மீட்டர் தூரத்திற்கான மின் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 256 மின் ஊழியர்கள் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 249முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் 26ஆயிரத்து 495 மணல் மூட்டைகளும், 98 ஆயிரம் காலி சாக்குகள், 672.38 மெ.டன் மண், 3 ஆயிரத்து 428 சவுக்கு மரங்கள், 985 சவுக்கு குறுக்கு மரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறை மூலம் 12துணை மின் நிலையங்களில் 5000 மின்கம்பங்கள், 70 கி.மீ மின்கம்பிகள்,

30 மின்மாற்றிகள், 150 நியாய விலைக்கடைகளில் 3 மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய குடிமைப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 251 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் தலா 10 பேர் அடங்கிய 80 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, மரம் அறுவை கருவி, கயிறு, மண்வெட்டி, பாதுகாப்பு உடைகள் என அனைத்து மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 349 பாலங்கள், 5,258 சிறு பாலங்கள் ஆகியவற்றில் சேதம் ஏற்படாமல் தடுக்க 9,560 மணல் மூட்டைகள்,

4,170 சவுக்கு குச்சிகள், 76 தடுப்பு கட்டைகள், 43 மரம் அறுக்கும் இயந்திரம், 23 லாரிகள், 21 டிராக்டர்கள், 23 பொக்லைன் இயந்திரங்கள், 15 புல்டோசர்கள், 8 மோட்டார் பம்ப்ஷெட், 7 ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 பாலங்கள், 10,135 சிறு பாலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது நீர் தேங்காமல் செல்லும் வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பேரிடரால் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1,42,998 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடலோர பகுதிகளில் நிவர் புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால், அப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தங்குவதற்கு 10 பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளனர். அங்கு குடிநீர் வசதி, ஜெனரேட்டர், தங்கும் மக்களுக்கு உணவு சமைப்பதற்கான பொருள்கள், பாத்திரங்கள், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இதை தவிர திருமண மண்டபங்கள், பள்ளி கட்டிடங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, திருவரம்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் உள்ளிட்ட 11 பகுதிகளில் மிக அதிகம் பாதிக்கப்பட கூடியவை 3, அதிகம் பாதிக்கப்பட கூடியவை 38, மிதமாக பாதிக்கப்பட கூடியவை 41, குறைவாக பாதிக்கப்படக் கூடியவை 72 என மொத்தம் 154 இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதினொரு பகுதிகளில், 118 பள்ளிக்கூடங்கள், 5 கல்லூரிகள், 11 சமுதாயக் கூடங்கள், 23 திருமண மண்டபங்கள், 2 பிற இடங்கள் என மொத்தம் 159 இடங்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Camps ,delta , Camps, sandbags ready in the delta
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!