×

4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

ராமேஸ்வரம்: தமிழகம் முழுவதும் 4வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.300 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘நிவர் புயல்’ இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் வலுவடைந்து வருவதால் பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசுகிறது. பாம்பன் கடல் கொந்தளிப்பாகவும் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. சீறி வரும் கடல் அலைகளால் பாம்பன் வடக்கு கடலோர பகுதியில் 40 அடி தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டதால் கரையோரத்தில் இருந்த மீனவர்களின் வீடுகளின் சுற்றுச்சுவர்கள் இடிந்து குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

வடக்கிலிருந்து தென்கடல் பகுதிக்கு செல்லும் நீரோட்டத்தின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகள் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் தங்களது படகுகளை குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம், பாம்பன் உள்பட தமிழகம் முழுவதும் மீனவர்கள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.300 கோடிக்கும் அதிகமான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், அவர்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். பாம்பன் துறைமுக அலுவலகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் ராமேஸ்வரத்தில் நேற்று பிற்பகலுக்கு மேல் காற்றின் வேகம் அதிகரித்தது. கடல் மட்டமும் உயர்ந்துள்ளது. கரையை நோக்கி வரும் புயலின் தூரம் குறைந்து வரும் நிலையில், ராமேஸ்வரம், பாம்பன் சுற்றுவட்டப்பகுதிகள் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கொரோனா தளர்வுக்கு பின் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் வந்து சென்ற நிலையில் புயல் எச்சரிக்கையினால் கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வருவது முற்றிலும் குறைந்து விட்டது.


Tags : Fishermen ,sea , Fishermen do not go to sea for 4th day: Rs 300 crore fish trade affected
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...