×

நாடாளுமன்ற, பேரவை தலைவர்கள் மாநாடு: குஜராத்தில் தொடங்கியது

கேவாடியா: 80வது அகில இந்திய நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார். கடந்த 1921ம் ஆண்டு அகில இந்திய நாடாளுமன்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு தொடங்கியது. இதன் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டைக் குறிக்கும் விதமாக குஜராத்தில் உள்ள கேவாடியாவில், இன்றும் (நவ. 25) நாளையும் மாநாடு நடக்கிறது. அதில், ‘சட்டப்பேரவை, அதிகாரிகள் மற்றும் நிதித்துறைக்கு இடையேயான இணக்கமான ஒத்துழைப்பு துடிப்பான ஜனநாயகத்துக்கு அவசியம்’என்பது இந்த வருட மாநாட்டின் மையக் கருவாக இருக்கும்.

விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று கேவாடியாவிற்கு வந்தார். தொடர்ந்து அவர், இம்மாநாட்டை தொடங்கி வைத்தார். குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை மற்றும் மாநாட்டின் தலைவர் ஓம் பிர்லா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியான நாளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.



Tags : Conference ,Assembly Leaders ,Parliament ,Gujarat , Conference of Parliament and Assembly Leaders: Launched in Gujarat
× RELATED காஷ்மீர் மற்றும் லடாக்கில் தொகுதி...