×

பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்: வீட்டு மாடியில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துங்கள்: சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!!!

சென்னை: நிவர் புயல் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின்படி நிவர் புயல் இன்று இரவு வலுவான புயலாக கரையை கடக்கும் நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிவர் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அடினடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பொழியக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் வியாபார வணிக நிறுவனங்கள் தங்கள் இடங்களில் அமைத்துள்ள  விளம்பர பலகைகள், பதாகைகள் மற்றும் தட்டிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்றி சேதாரங்களிலிருந்து தங்களையும், பொதுமக்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். தேவையின்றி வெளியில் வரவேண்டாம். தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள்  மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, பொதுமக்கள் முன்னேச்சரிக்கையுடன் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும், இது தொடர்பாக தேவையான விவரங்களை தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல்  தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள்: 044-25384530, 044-25384540. மற்றும் தொலைபேசி எண்: 1913 எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆணையாளர் பிரகாஷ்  தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : public ,terrace ,Chennai Corporation ,house , Do not come out unnecessarily to the public: Dispose of unwanted items on the terrace of the house: Chennai Corporation Instruction. !!!
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...