பழநி-கொடைக்கானல் இடையே மலைச்சாலையில் தடுப்புச்சுவர் வேண்டும்: வாகனங்கள் பள்ளத்தில் பாயும் அபாயம்

பழநி: பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக சுற்றுலா பயணிகள் வரும் முக்கிய இடமாக கொடைக்கானல் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு பழநி வழியாகவும், வத்தலக்குண்டு வழியாகவும் செல்லலாம். தமிழகத்தின் மேற்கு பகுதி, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக பழநி-கொடைக்கானல் சாலை உள்ளது. பழநியில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் கொடைக்கானல் அமைந்துள்ளது. இதில் 15 கிலோமீட்டர் மட்டுமே சமவெளி பகுதியாகும்.

50 கிலோமீட்டர் மலைப்பாதை பயணமாகும். கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். டிசம்பர் மாதம் ஆஃப் சீசன் துவங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவு இருக்கும். இந்நிலையில் பழநி-கொடைக்கானல் மலைச்சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர்கள் இல்லை. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் கூறுகையில், பழநி-கொடைக்கானல் சாலையில் மேல்பள்ளம் உள்ளிட்ட சில இடங்களில் சாலையோரங்கள் பல நூறு அடி ஆழ பள்ளங்கள் உள்ளன.

இங்கு தடுப்புச் சுவர்கள் இல்லை. இதனால் வாகனங்கள் பள்ளத்திற்குள் பாய்ந்தால் உயிரிழப்பு உறுதி. எனவே மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பழநி-கொடைக்கானல் சாலையில் ஆய்வு மேற்கொண்டு தடுப்புச் சுவர்கள் அவசியமான இடங்களில் அமைத்து, எதிரொலிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்து ஏற்பட்டால் எளிதில் அணுகும் வகையில் பழநி-கொடைக்கானல் சாலையின் இடைப்பட்ட பகுதியில் சீசன் காலங்களில் மட்டுமாவது தற்காலிக முதலுதவி சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: