விருதுநகர் மாவட்டத்தில் 26 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி தேய்ந்து வரும் தென்னை விவசாயம்

* அழிந்து வரும் ேவகத்தில் மாநிலத்தில் முதலிடம்  * அரசு நிவாரணம் இல்லாமல் விவசாயிகள் சோகம்

விருதுநகர்: உலக தேங்காய் உற்பத்தியில் 79 சதவீதத்தை இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா ஆகிய 4 நாடுகளே பூர்த்தி செய்கின்றன. இந்திய தேவையில் 93 சதவீதத்தை கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்கள் வழங்குகின்றன. தமிழக தென்னை விவசாயத்தில் கோவை, திருப்பூர், தஞ்சை, தேனிக்கு அடுத்ததாக விருதுநகர் மாவட்டம் உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, தேவதானம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாபட்டி, கான்சாபுரம், கொடிக்குளம், மம்சாபுரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் 10,591 ஹெக்டேரில், அதாவது 26,159 ஏக்கரில் நடைபெறுகிறது. தமிழகத்தில் தென்னை விவசாயத்தில் விருதுநகர் மாவட்டம் 5வது இடத்தில் இருந்தாலும், தென்னை அழிவில் முதலிடத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

26 ஆயிரம் ஏக்கரில், ஏக்கருக்கு 74 தென்னை மரங்கள் இருந்த நிலையில், வறட்சி, புழுதிப்புயல், நீர் பற்றாக்குறை, கண்டாமிருக வண்டு, வெள்ளை ஈ தாக்குதலால் ஏக்கருக்கு 20 மரங்கள் வரை கருகி, பட்டுப்போய் விட்டன. குட்டை ரக மரம் 3 முதல் 4 ஆண்டுகளிலும், நெட்டை மரம் 5 ஆண்டுகளிலும் விளைச்சலுக்கு வந்து விடுகிறது. ஒரு தென்னை மரத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 120 முதல் 160 தேங்காய் பறிக்கலாம்.க்ஷமாவட்டத்தில் 2013 முதல் தென்னை விவசாயம் பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. காய்ப்புத்திறன் குறைந்து வருவதால் ஏக்கருக்கு 6 ஆயிரம் தேங்காய் பறித்த நிலையில் தற்போது 3 ஆயிரம் காய்களாக குறைந்து விட்டது. 2013 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வறட்சியால் தென்னை மரங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்ட போதும், இன்று வரை உரிய இழப்பீடு கிடைக்கவில்லை.

2016ல் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், பரப்பளவு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடாக ரூ.16 கோடி வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாநில அரசு இழப்பீடு தொகையை இதுவரையிலும் வழங்காமல் இழுத்தடிக்கிறது. மத்திய அரசு தென்னை விவசாயிகள் புத்துயிர் திட்டத்தில் வழங்கிய இலவச தென்னங்கன்றுகளும் சில விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வடமாநில முதலாளிகள் சிண்டிகேட் அமைத்து, அவர்கள் வைத்ததுதான் சட்டமாக்கி குறைந்த விலைக்கு தென்மாவட்டங்களில் தேங்காய் கொள்முதல் செய்கின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ளூர் வியாபாரிகள் 100 தேங்காய் வாங்கினால், 95 காய்களுக்கு மட்டுமே தொகை கொடுத்து, மீதி 5 காய்களை ‘லாபக்காயாக’ பெறும் நடைமுறை உள்ளது. ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் அது சொத்தை, இது சொத்தை என பொய்க்காரணம் கூறி 100 தேங்காய்க்கு 15 ‘லாபக் காய்கள்’ எடுக்கின்றனர்.

கோவை, பொள்ளாச்சியை போன்று, விருதுநகர் மாவட்டத்திலும் தென்னையிலிருந்து கிடைக்கும் அனுமதிக்கப்பட்ட சத்து பானமான நீரா பானம் உற்பத்திக்கு அரசு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை உள்ளது. இதனை நிறைவேற்றுவது விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்தும். மாவட்டத்தில் உழவர் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய 8 உழவர் உற்பத்தி நிறுவனங்கள், 13 நபார்டு நிறுவனங்கள் என 21 நிறுவனங்கள் களத்தில் உள்ளன. எனினும் விவசாயிகளை காப்பதற்கான செயல்பாடுகள் இல்லை. இந்நிறுவனங்கள் தேங்காய், கொப்பரை, நீரா, தென்னை கழிவுகளில் இருந்து உரம், மட்டை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மேலும் வேகப்படுத்துவது அவசியம். இவர்களின் முயற்சிகளே தென்னை விவசாயிகளை பாதுகாக்கும்.

‘கொப்பரைக்குரூ.125 வேண்டும்’

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ராமச்சந்திர ராஜா கூறும்போது, ‘‘தென்னை ஊக்குவிப்பு மானியம் அரசு வழங்குவதில்லை. எண்ணெய்க்கான கொப்பரை தேங்காயை கிலோ ரூ.125க்கு எடுக்க வேண்டும்’’ என்றார்.

‘ரூ.10 ஆயிரம் இழப்பீடு வேண்டும்’

தென்னை விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் விஜயமுருகன் கூறும்போது, ‘‘பட்டுப்போன தென்னை மரங்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசன மானியத்தை கம்பெனிகளிடம் வழங்காமல் விவசாயிகளிடம் வழங்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்திடம் நிதிபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

‘முயற்சிகள் எடுக்கிறோம்...’

வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேங்காய் கொள்முதல் ஒழுங்கு முறை விற்பனை மையங்கள் மூலம் விற்பனை, ஏலம் விடும் நடைமுறையை மேற்கொண்டுள்ளோம். 2016ம் ஆண்டு பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெறுவதற்கான முயற்சிகள் எடுத்து வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: